

புதுடெல்லி,
நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்வி நிலையங்களில் இளங்கலை படிப்புகளில் சேர பல்கலைக்கழகங்கள் பொது நுழைவுத்தேர்வு (கியூட்-யூஜி) கடந்த 2022ல் அறிமுகம் செய்யப்பட்டது. மாநில அரசின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் கியூட் நுழைவுத்தேர்வை பின்பற்றலாம். இதனால், நாட்டின் 2வது மிகப்பெரிய நுழைவுத்தேர்வாக கியூட் உள்ளது. இத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.
இந்த ஆண்டிற்கான கியூட்-யூஜி தேர்வு கடந்த 11ம் தேதி தொடங்கி வரும் 31ம் தேதி வரை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பக்ரீத் பண்டிகை காரணமாக சில தேர்வுகள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டு, மே 30 மற்றும் ஜூன் 6, 7ம் தேதிகளில் நடத்துவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இந்நிலையில், கியூட் யூஜி நுழைவுத்தேர்வு நேற்று நாடு முழுவதும் பல தேர்வு மையங்களில் நடந்தது. காலை 9 மணிக்கு தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பல தேர்வு மையங்களில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், சில மையங்களில் தேர்வு தாமதமானது. இந்நிலையில், இதுதொடர்பாக மக்களவை எதிர்க் கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்து தனது 'எக்ஸ்' பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நீட், சி.பி.எஸ்.இ., எஸ்.எஸ்.சி. ஆகிய தேர்வுகளை தொடர்ந்து, கியூட் தேர்விலும் பிரச்சினை எழுந்துள்ளது. 4 தேர்வுகளிலும் ஒரு கோடி மாணவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்.'விஸ்வகுரு' என்று சொல்லிக் கொள்பவரால், நாட்டில் ஒரு தேர் வைக்கூட முறையாக நடத்த முடியவில்லை. பிரதமர் மோடி ஒட் டுமொத்த கல்வித்துறையையும் அழித்து விட்டார். எந்த தலைமுறையின் எதிர்காலத்தை நீங்கள் அழித்துக் கொண் டிருக்கிறீர்களோ, அதே தலைமுறை உங்களை கேள்வி கேட்கும்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' நுழைவுத்தேர்வு அவசியம். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த மே 3-ம் தேதி நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததால் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு மறு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீட் மறுத்தேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.மறுதேர்வு ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை சுமார் 22 லட்சம் மாணவ- மாணவிகள் எழுத உள்ளனர்.