

இந்தூர்,
கொரோனா பாதிப்புகளை தடுக்க இந்தியாவில் அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன்படி, கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் நாட்டில் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன.
இதற்காக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முன்கள மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு முதலில் தடுப்பூசிகள் போடப்பட்டன.
இதன்பின்னர் கடந்த ஏப்ரல் 1ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன. இதில், 100 வயது கடந்தவர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், கடந்த மே 1ந்தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதன்படி, கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி டோஸ் போடும் புதிய கட்ட பணிகள் நேற்று தொடங்கப்பட்ட நிலையில், சாதனையளவாக 80.95 லட்சம் டோஸ்கள் போடப்பட்டன.
உலகம் முழுவதும் இதுவரை போடப்பட்ட ஒரு நாள் கொரோனா தடுப்பூசி எண்ணிக்கையில் இது அதிகம் ஆகும். இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் சாதனை அளவாக 2 லட்சத்திற்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளனர்.
இதுபற்றி இந்தூர் ஆட்சியர் மணீஷ் சிங் கூறும்பொழுது, வேசின் மகாபியான் திட்டத்தின் கீழ் இந்தூரில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 663 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. இது, நாட்டில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் ஒரு நாளுக்கான எண்ணிக்கையில் மிக அதிகம் ஆகும் என தெரிவித்து உள்ளார்.