பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார் விகே பாண்டியனின் மனைவி சுஜாதா ராவத்

சுஜாதா ராவத் கட்சியில் இணைந்ததன் காரணமாக கட்சித் தலைமையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் நவீன் பட்நாயக் தெளிவுபடுத்தினார்
சுஜாதா
Published on

புவனேஸ்வர்

தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியனின் மனைவியும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா ராவத், ஒடிசாவின் முன்னாள் முதல் மந்திரியுமான, பிஜு ஜனதா தளம் (பிஜேடி) தலைவருமான நவீன் பட்நாயக் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார். ஒடிசா முதல் மந்திரியாக நவீன் பட்நாயக் பதவி வகித்த காலத்தில், அவரது தனிச் செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த வி.கே. பாண்டியன் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைநகர் புவனேஸ்வரில் உள்ள பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைமையகமான ஷங்கா பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியில் உறுப்பினராக சுஜாதா இணைந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நவீன் பட்நாயக், "சுஜாதா ராவத் நீண்டகால நிர்வாக அனுபவம் கொண்ட ஐஏஎஸ் அதிகாரி. பல்வேறு துறைகளில் தலைமைப் பொறுப்புகளை வகித்து திறம்பட பணியாற்றியுள்ளார். குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்துக்கான பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியவர். அவரை பிஜு ஜனதா தளம் கட்சியில் வரவேற்கிறேன். தற்போது அவர் ஒரு சாதாரண உறுப்பினராக இணைந்துள்ளார். தனது அனுபவத்தின் மூலம் மக்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கும் சிறந்த சேவையாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்தார்.

மேலும், சுஜாதா ராவத் கட்சியில் இணைந்ததன் காரணமாக கட்சித் தலைமையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் நவீன் பட்நாயக் தெளிவுபடுத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், "அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் கட்சியை நானே வழிநடத்துவேன். இதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com