அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு ரூ.355 லட்சம் கோடியாக உயரும் - நிதி மந்திரி பியூஸ் கோயல் தகவல்

அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு சுமார் ரூ.355 லட்சம் கோடியாக இருக்கும் என பட்ஜெட் உரையில் நிதி மந்திரி பியூஸ் கோயல் குறிப்பிட்டார்.
Published on

புதுடெல்லி,

2019-20 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி பியூஸ் கோயல் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர் இந்திய நாட்டின் பொருளாதார நிலை குறித்து எடுத்துரைத்தார். அவர் கூறியதாவது:-

அடுத்த 5 ஆண்டுகளில் நமது நாட்டின் பொருளாதார மதிப்பு 5 டிரில்லியன் டாலராக இருக்கும். (சுமார் ரூ.355 லட்சம் கோடி.)

அடுத்த 8 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் 10 டிரில்லியன் டாலராக (சுமார் ரூ.710 லட்சம் கோடி) உயர வேண்டும் என்பது எங்கள் ஆசை.

2017-18 நிதி ஆண்டில் நேரடி வரி வருமானம் 18 சதவீதம் உயர்ந்துள்ளது.

ரூபாய் நோட்டு மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு பின்னர் இந்திய வரி அமைப்பில் புதிதாக 1 கோடியே 6 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர்.

ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியை கடந்துள்ளது.

கருப்பு பணத்துக்கு முடிவு கட்ட மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது.

கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை காரணமாக கணக்கில் காட்டப்படாத ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கோடி வெளியே வந்துள்ளது. அது மட்டுமல்ல, பெயரளவில் செயல்பட்டு வந்த 3 லட்சத்து 38 ஆயிரம் நிறுவனங்களின் (செல் கம்பெனிகள்) பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.ரூ.5 கோடிக்கு குறைவான ஆண்டு வருமானம் கொண்டுள்ள வர்த்தக நிறுவனங்கள்தான் சரக்கு சேவை வரி செலுத்துகிற 90 சதவீத நிறுவனங்களாக உள்ளன. அந்த நிறுவனங்கள், 3 மாதங்களுக்கு ஒரு முறை ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மாநில வரி வசூல் 14 சதவீத வளர்ச்சி காண்பதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com