புதுடெல்லி,
நாம் வாழும் பூமியில் நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு என இயற்கை பேரிடர்கள் அதிகம் நடக்கிற நாடாக இந்தோனேசியா விளங்குகிறது. இந்த நாடு பசிபிக் நெருப்பு வளையத்தில் புவித்தட்டுகள் மோதிக்கொள்கிற இடத்தில் அமைந்துள்ளதால், எரிமலை வெடிப்புகள், நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அந்த நாட்டின் சுலாவெசி மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 6.02 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அங்கு 3 லட்சம் மக்கள் வசிக்கக்கூடிய டோங்கலா நகரை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.5 புள்ளிகளாக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
சாலைகளிலும், திறந்தவெளி இடங்களிலும் சடலங்கள் குவியல் குவியலாக சிதறி கிடக்கின்றன. இடிபாடுகளிலும், சேறு, சகதிகளிலும் குழந்தைகளின் சடலத்துடன் பலர் கதறி அழும் காட்சிகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பல இடங்களில் சாலைகள் பெயர்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவால் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் இருளில் தவிக்கின்றனர். பலரும் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல், திறந்தவெளியில் வைத்தபடி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். பலு விமான நிலையத்தின் ஓடுபாதைகள் சேதமடைந்துள்ளன. மீட்பு பணிகளுக்காக மட்டும் இங்கு விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் 4ம் தேதி வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வேண்டிய உதவிகளை செய்யும்படி இந்தோனேஷிய அதிபர் ஜகோ விடோடோ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில், நிலநடுக்கம், சுனாமியில் உயிரிழந்தவர்களுக்காக இந்திய மக்கள் மற்றும் தனது சார்பில் இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தோனேஷியாவிற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் எனவும் மோடி உறுதியளித்தார்.