பெரம்பலூர்,
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நேற்று மாலை பெரம்பலூர் தேரடி திடலில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். முன்னதாக அவர் துறைமங்கலம் தீரன் நகர் அருகே உள்ள மாவட்ட கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீடு, கல்லூரிகளில் தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்திருப்பதை கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தி, மாற்றுக்கருத்துகள் கொண்ட கட்சியினரையும், எதிர்கட்சியினரையும் பழிவாங்கி அடக்கி ஆள்கிறது. அ.தி.மு.க. அரசு அதற்கு துணைபோகிறது. பிரதமர் நரேந்திரமோடி பொய்மையின் மறுஉருவமாக செயல்படுகிறார். கடந்த 2014 பொதுத்தேர்தலின்போது வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு எடுத்துவந்து ஒவ்வொரு இந்திய மக்களின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வோம்.
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்போம். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று தேர்தல் வாக்குறுதியாக கூறினார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் எந்த வாக்குறுதிகளையும் மோடி நிறைவேற்றவில்லை. முந்தைய தேர்தலில் தேநீர் விற்றவர் என்றார். இந்த தேர்தலில் இந்தியாவின் காவலாளி என்கிறார். ராணுவத்தின் எல்லைத்தியாகங்களையும், ரகசியங்களையும் பாதுகாக்காமல் அறிவிப்புகளை வெளியிட்டு தேர்தல் சமயத்தில் தமக்கு சாதமாக பயன்படுத்தி வருகிறார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றுவோம், தமிழக ஆறுகளை இணைப்போம் என்றார். உலகில் எங்கும் இல்லாதவகையில் காவிரி டெல்டா சமவெளிப்பகுதியில் 12 ஆயிரம் பாசனப்பகுதி இன்று பாலைவனப்பகுதியாக மாறியுள்ளது. தி.மு.க. கூட்டணி மதசார்ப்பற்ற கூட்டணி ஆகும். இந்துக்களுக்கு எதிரான கூட்டணி அல்ல. பொள்ளாச்சியில் 300 இளம் பெண்களை பாலியல் கொடுமைக்கு ஆளான பாதகச்செயலில் ஆளும் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் அப்பாவிகள் பலியான சம்பவத்தை எடப்பாடி பழனிசாமி அரசு தடுக்கவில்லை.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை குறும்படமாக எடுத்து வெளியிட்ட முகிலனை 20 நாட்களுக்கு மேலாகியும் கண்டுபிடிக்கமுடியவில்லை. தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை. எனது உயிருக்கும் உத்திரவாதம் இல்லை. தமிழக ஆளுநரும், புதுச்சேரி ஆளுரும் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகின்றனர். சுதந்திரமாக, நடுநாயகமாக செயல்படவேண்டிய தேர்தல் ஆணையம் நரேந்திர மோடியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்று கம்யூனிஸ்டு கட்சி குற்றம் சாட்டுகிறது. கடந்த 2004-ல் நடந்த பொதுத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அறுதிப்பெருமான்மை இடங்களை பிடித்தது போல தமிழகம், புதுச்சேரியில் 40 இடங்களிலும் வெற்றிபெறும். சட்டமன்ற இடைத்தேர்தலில் 18 இடங்களிலும் வெற்றிபெறும். புதுடெல்லியிலும், தமிழகத்திலும் விரைவில் ஆட்சிமாற்றம் ஏற்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின்போது கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஞானசேகரன், துணை செயலாளர் தியாகராஜன், மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.