குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் முத்தரசன் பேட்டி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று சேலத்தில் முத்தரசன் கூறினார்.
Published on

சேலம்,

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பற வலியுறுத்தி சேலம் கோட்டையில் முஸ்லிம் பெண்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 14-வது நாளாக அவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மே 17 இயக்க தலைவர் திருமுருகன்காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய பாரதீய ஜனதா அரசு அனைத்து திட்டங்களிலும் தோல்வி அடைந்து உள்ளது. இதை மூடி மறைப்பதற்காக வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. ஆர்.எஸ்.எஸ். இயக்க தீர்மானங்களை நிறைவேற்றுவதிலேயே குறிக்கோளாக இருக்கிறது. முத்தலாக் சட்டம், ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை, ராமர்கோவில் கட்ட தீர்மானம், தற்போது குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட அனைத்தையும் உள்நோக்கத்தோடு கொண்டு வந்து உள்ளன.

கலவரத்தை ஏற்படுத்த முயற்சி

டெல்லி போராட்டம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கூறிய நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பலதுறைகள் சீர்குலைக்கப்பட்டு உள்ளது. மதரீதியாக மக்களை பிளவு படுத்தி உள்ளதால், நாடுமுழுவதும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. போராட்டத்தில் முஸ்லிம் மக்கள் மட்டும் அல்ல அனைத்து தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. ஆயுதம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் போராட்டம் நடத்தலாம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் சேலம் வர இருப்பதாகவும், அதற்குள் போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறும் போலீசார் வற்புறுத்தி வருகின்றனர். இந்த செயலை கண்டிக்கிறோம். டெல்லியில் போராட்டம் நடைபெறுவதை பார்த்து மத்திய அரசு மிரளுகிறது. டெல்லி போல் தமிழ்நாட்டிலும் போராட்டத்தை நடத்த முயற்சி நடந்து வருகிறது.

போராட்டம் தொடரும்

ரஜினிகாந்துக்கு எதிலும் நம்பிக்கை இல்லை. நாட்டை பற்றி கவலை இல்லை. வருடத்திற்கு ஒரு படம் நடித்தால் அவருக்கு போதும். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி வருகிறோம். ஆனால் தமிழக அரசு சட்டம் நிறைவேற்ற மறுக்கிறது. எனவே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com