திருச்சியில் ஏ.டி.எம்.களில் வைக்க கொண்டு சென்ற ரூ.58½ லட்சம் பறிமுதல் வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

திருச்சியில் வங்கி ஏ.டி.எம்.களில் வைக்க கொண்டு சென்ற ரூ.58½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Published on

மலைக்கோட்டை,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய பணம் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என ஆங்காங்கே வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருச்சி கே.கே.நகர் ரேஸ்கோர்ஸ் சாலையில் நேற்று இரவு தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழுவினர் அதிகாரி முத்துக்கருப்பன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வேனை நிறுத்தி சோதனையிட்டனர்.

அந்த வேனில் கட்டுக்கட்டாக பணம் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. வேன் டிரைவரிடம் விசாரித்தபோது, அந்த பணம் திருவெறும் பூரில் பகுதியில் உள்ள வங்கிகளில் இருந்து ஜங்ஷன், டி.வி.எஸ்.டோல்கேட், சுப்பிரமணியபுரம், சேதுராமன்பிள்ளைகாலனி ஆகிய பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்.களில் வைக்க கொண்டு சென்றது தெரியவந்தது. ஆனால் அவரிடம் அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து வேனுடன் பணத்தை பறிமுதல் செய்து திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு வேனில் இருந்த பணத்தை எண்ணிப்பார்த்தபோது ரூ.58 லட்சம் இருந்தது. உடனே திருச்சி கிழக்கு தாசில்தார் சண்முகவேலன், அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர் துரைமுருகன், தேர்தல் செலவின உதவி பார்வையாளர் பிந்துராம் ஆகியோர் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு பேசினர். இதையடுத்து வங்கி அதிகாரிகள் கிழக்கு தாலுகா அலுவலகத்துக்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் உரிய ஆவணங்களை சரிபார்த்துவிட்டு பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திரும்ப ஒப்படைத்தனர். திருச்சியில் ஏ.டி.எம்.களில் வைக்க கொண்டு சென்ற ரூ.58 லட்சம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com