மகாத்மா காந்தி கொலை சதி பற்றி மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல்

மகாத்மா காந்தி கொலை சதி பற்றி மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என ஆதாரங்களுடன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Published on

புதுடெல்லி,

மகாத்மா காந்தி கொலை சதி பற்றி மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆதாரங்களுடன் சுப்ரீம் கோர்ட்டில் ஆராய்ச்சியாளர் ஒருவர் மீண்டும் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

தேசப்பிதா மகாத்மா காந்தி, டெல்லி பிர்லா மாளிகையில், 1948-ம் ஆண்டு, ஜனவரி 30-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே ஆகிய 2 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த படுகொலையில், மிகப்பெரிய அளவில் வரலாறு மூடி மறைக்கப்பட்டு விட்டதாக கூறி, இது தொடர்பாக முழுமையாக மறு விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டு, சுப்ரீம் கோர்ட்டில் மும்பையை சேர்ந்த ஆராய்ச்சியாளரும், அபினவ் பாரத் அறக்கட்டளையின் அறங்காவலருமான பங்கஜ் குமுத்சந்திர பத்னிஸ், கடந்த ஆண்டு ஒரு பொதுநல வழக்கு தொடுத்தார்.

அந்த வழக்கை அப்போது நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், எஸ்.ஏ. பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்துவிட்டது.

இந்த நிலையில் அவர் புதிய ஆதாரங்கள் அடிப்படையில் இந்த விவகாரத்தில் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் படியேறி வழக்கு தொடுத்து உள்ளார்.

அதில், மகாத்மா காந்தி உடலில் இருந்த காயங்கள் தொடர்பான படங்களின் தடயவியல் பரிசோதனை அறிக்கை மற்றும் சில புத்தக தகவல்களை புதிய ஆதாரங்களாகக் கொண்டு மகாத்மா காந்தி படுகொலையில் மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று கோரி உள்ளார்.

லாரன்ஸ் டி சல்வேடார் எழுதி 1963-ம் ஆண்டில் வெளியான காந்தியை கொன்றது யார்?, மவுண்ட் பேட்டன் பிரபுவின் மகள் பமீலா மவுண்ட் பேட்டன் எழுதி வெளியான இந்தியா நினைவூட்டியது ஆகிய 2 புத்தகங்களில் உள்ள தகவல்களை வழக்கில் அவர் ஆதாரமாக சுட்டிக்காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்த புத்தகங்கள் மூலம், மகாத்மா காந்தி கொலை சதியில் அப்போது உயர்ந்த அதிகாரத்தில் இருந்த நபர் அல்லது நபர்கள் உடந்தையாக இருந்ததாக முடிவுக்கு வர முடிகிறது என கூறி உள்ளார்.

மேலும், மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட மறுநாளில் முக்கிய நாளிதழ் ஒன்றில் வெளியான படத்தில் அவரது நெஞ்சில் 4 காயங்கள் இருந்தது தெரிய வந்துள்ளதாகவும், அமெரிக்காவை சேர்ந்த புகழ் பெற்ற தடயவியல் வல்லுனர் அறிக்கையில் அது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வழக்கில் கூறப்பட்டுள்ளது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com