மும்பை,
மும்பை வான்கடே மைதானத்தில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதி மற்றும் 56-வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி கொல்கத்தா அணியின் சார்பில் சுப்மன் கில், கிரிஸ் லின் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் சுப்மன் கில் 9(16) ரன்களில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து அதிரடி காட்டி வந்த கிரிஸ் லின் 41(29) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய கேப்டன் தினேஷ் கார்த்திக் 3(9) ரன்னிலும், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆந்த்ரே ரஸ்செல் (0) ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து மலிங்கா பந்து வீச்சில் வெளியேறினர். அடுத்து ஜோடி சேர்ந்த ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா ஓரளவு ரன் சேர்த்தனர். அதில் நிதிஷ் ராணா 26(13) ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் ராபின் உத்தப்பா 40(47) ரன்களும், ரிங்கு சிங் 4(6) ரன்னிலும் வெளியேறினர்.
முடிவில் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக மலிங்கா 3 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் மும்பை அணிக்கு 134 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.