* அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், பிரான்ஸ் அதிபர் மெக்ரானும் தொலைபேசி வாயிலாக உரையாடினர். அப்போது, சிரியா விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும், ஈரானின் அணுசக்தி தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
* ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் புதிய தலைவர் எங்கு இருக்கிறார் என்பது தங்களுக்கு தெரியும் என்றும், அமெரிக்காவின் கண்கள் அவர் மீது இருப்பதாகவும் ஜனாதிபதி டிரம்ப் கூறினார். எனினும் ஐ.எஸ். இயக்கத்தின் புதிய தலைவர் பெயர் உள்ளிட்ட விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
* அமெரிக்காவின் பெட்ரோலிய நிறுவனத்தில் இருந்து 1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.72 ஆயிரம் கோடி) மதிப்புடைய வர்த்தக ரகசியங்களை திருடிய வழக்கில் சீனாவை சேர்ந்த கோங்ஜின் டான் (வயது 35) குற்றவாளி என அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அவரது தண்டனை விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
* ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் பிரிஸ்போன் நகரில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. எனினும் ஹெலிகாப்டரில் இருந்த விமானி லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
* பாலஸ்தீனத்தின் காசா நகரை குறிவைத்து இஸ்ரேல் படைகள் இடைவிடாது வான்தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் இதுவரை பாலஸ்தீன மக்கள் 10 பேர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.