

தூத்துக்குடி,
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் காந்தியை ஆதரித்து கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று மாலை தூத்துக்குடி கே.டி.சி.நகர் சந்திப்பு பகுதியில் திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இது ஒரு வித்தியாசமான பிரசாரம். மற்றவர்களை திட்டி, அவர்களை விட நாங்கள் சிறந்தவர்கள் என்று சொல்லிக்காட்டும் பிரசாரம் அல்ல. ஒருவரையொருவர் திட்டிக் கொள்வதற்கு இருவர் இருக்கிறார்கள். அந்த வேலையை அவர்களே நன்றாக செய்து கொண்டு இருக்கிறார்கள். அதனை நாங்கள் செய்ய வேண்டியது இல்லை. இங்கு எங்களால் உங்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதை தெளிவாக, முடிந்த போதெல்லாம் சொல்லியும், வருங்காலங்களில் செய்தும் காட்டப்போகிறோம் என்பதுதான் எங்கள் கட்சியின் பலம்.
தற்போது நடைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் 3 கட்சிகளில் யாராவது ஜெயித்து மக்களுக்கு இதனை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்களா?. அப்படி நினைத்து இருந்தால் முன்கூட்டியே அட்வான்ஸ் கொடுக்கமாட்டார்கள். ஏனென்றால் அது அவர்கள் பணம் இல்லை. முழுமையாக உங்கள் பணமும் இல்லை. உங்களுக்கு வரவேண்டியதில் சில்லறையை உங்களிடம் கொடுக்கிறார்கள். தயவு செய்து அதனை மறந்து விடுங்கள். மாற்றத்துக்கான விதையை தூவும் நல்ல நேரம் இது. மழை இல்லாத நேரம்தான் என்றாலும், இந்த விதை வேர் பிடிக்கும். அதனை நம்புங்கள். உங்கள் வேட்பாளர் காந்திக்கு டார்ச்லைட் சின்னத்தில் வாக்களியுங்கள். உங்கள் கஷ்டங்களை தெரிந்தவர். நீங்கள் படும் அவலங்களை உங்களோடு சேர்ந்தே அனுபவித்து கொண்டு இருப்பவர்.
இங்கு எங்கள் தொண்டர்கள் பலரும் அமைதியாக நின்றுகொண்டு இருக்கிறார்கள். இவர்களை நான் கடந்த 37 வருடங்களாக பழக்கப்படுத்தி உள்ளேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தங்கள் கடமை பணி செய்து கிடப்பதே என்று இருந்தவர்கள். இனியும் அப்படித்தான் இருப்பார்கள். அவர்களுக்கு எல்லாம் 37 வருடத்தில் நன்றி கூட சொன்னது இல்லை. அன்பு மட்டும் தான் எங்களுக்கு பரிமாற்றமாக இருந்து இருக்கிறது.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பல்வேறு பொறுப்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் உங்கள் அன்பு இருந்தால், நாளை உங்கள் மத்தியில் தலைவர்களாக வலம் வரப்போகிறவர்கள். இவர்களை தோள்கொடுத்து தாங்குவதில் நான் பெருமை கொள்கிறேன். இப்போதைக்கு இதுதான் என் வேலை. அதனை செய்யத்தான் வந்து உள்ளேன். இதனை நீங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
இது என் பதவி, என் வளர்ச்சிக்காக மட்டும் அல்ல. நமது எதிர்காலம், நம் தமிழகத்துக்காக நாம் செய்யும் வேலை என்று நினைக்க வேண்டும். மறந்து விடாதீர்கள், இதற்காக பெரிய தியாகம் எதுவும் செய்ய வேண்டியது இல்லை. பணத்துக்கு மயங்காமல் ஓட்டு போட்டால் போதும். கப்பல் ஓட்டிய தமிழன் பிறந்த ஊரில் உங்களுக்கு நேர்மை, தைரியம் பற்றி நான் சொல்லிக் கொடுக்க வேண்டியது இல்லை. அந்த பாரம்பரியத்தில் வந்தவர்கள் நீங்கள். அதனை மறக்காமல் மனதில் வைத்துக் கொண்டால், செய்ய வேண்டியதை சரியாக செய்து விடுவீர்கள். அப்படி செய்தால் நிச்சயம் நாளை நமதே.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து தூத்துக்குடி அய்யப்பன் நகரில் பிரசாரத்தை முடித்து விட்டு, தாளமுத்துநகர் சிலுவைப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்தின் போது, ஓட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர் சவுரிராஜன், தலைமை அலுவலக பார்வையாளர் தங்கவேல், ஜான்சன் தங்கவேல், பிரபு, எபனேசர், பொன்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஓட்டப்பிடாரத்தில் அரசு மக்களுக்கு செய்து கொடுக்காத, மக்களுக்கு தேவையான விஷயங்களை முன்னிறுத்தி பிரசாரம் செய்ய உள்ளோம். ஆரம்பத்தில் இருந்தே அதுபோன்ற பிரசாரத்தை செய்து வருகிறோம். மற்றவர்களை திட்டுவது, தனிமனித வாழ்க்கையை பற்றி பேசுவது கிடையாது. மக்களுக்கு செய்ய தவறிய விஷயங்களை கடுமையாக சாடி, அதனை நாங்கள் எவ்வாறு செய்ய முடியும் என்பதை எடுத்துக்கூறுவது தான் எங்கள் பரப்புரையாக இதுவரை இருந்து உள்ளது. இப்போதும் அப்படித்தான் இருக்கும் என்றார்.