பழனி,
திருக்கார்த்திகை தினத்தையொட்டி, பழனி முருகன் கோவிலில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக மாலை 4 மணியளவில், ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் அனுமதியுடன் நாடாளுமன்றத்தில் பேசுவோம். தமிழக மக்களுக்கு வழங்கப்படுகிற அனைத்து வகை உதவிகளும் ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்படுகிறது. ராஜபக்சே, ஒரு இனத்தை அழித்த துரோகி என்று உலகத்துக்கே தெரியும்.
அவர் மீது கொலை குற்ற வழக்கு போட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். ஈழத்தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது தி.மு.க. அரசு வேடிக்கை பார்த்தது.
உணவுத்துறை, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் இணைந்து வெங்காயம் பதுக்கி வைத்திருப்போர் குறித்த விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 50 டன்னுக்கு மேல் வெங்காயத்தை வைத்திருக்கும் வியாபாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 79 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளின் மூலம் ரூ.40-க்கு வங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இதுவரை 34 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 13-ந்தேதி (நாளை மறுநாள்) எகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற வெங்காயத்தில் 500 மெட்ரிக் டன்னை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்குகிறது.
கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போது அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? என்று எதிர்க்கட்சியினர் பதில் அளிக்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பயிரிடப்பட்ட 2 ஆயிரம் ஏக்கர் வெங்காய பயிர்கள் நோயால் பாதிக்கப்பட்டதாக கூறுகின்றனர். இதுதொடர்பாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மூலம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு விவசாயிக்கு தான் விவசாயின் கஷ்டம் தெரியும். ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்-அமைச்சரின் மகன் என்பதால் விவசாயியின் கஷ்டம் அவருக்கு தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது திண்டுக்கல் ஆவின் தலைவர் ஏ.டி.செல்லச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ.சுப்புரத்தினம், நகர செயலாளர் முருகானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.