

ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுச்சாவடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி அப்பகுதியில் உள்ள காமாட்சி அம்மன், மாரியம்மன், சிவன் ஆகிய கோவில்களில் உள்ள சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மாரியம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டு இருந்த வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. இதில் முதல் காளையாக கோவில் காளையை அவிழ்த்து விட்டனர். ஜல்லிக்கட்டில் 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் திருச்சி, ஸ்ரீரங்கம், லால்குடி, அரியலூர், திருமானூர், புள்ளம்பாடி, கீழபழூர், மீன்சுருட்டி, காட்டுமன்னார்குடி, ஸ்ரீமுஷ்னம், ஆண்டிமடம், கல்லாத்தூர், கல்லேரி, தா.பழூர், சுத்தமல்லி, கீழமிக்கேல்பட்டி, காசாங்கோட்டை, தத்தனூர், காடுவெட்டாங்குறிச்சி, ஸ்ரீபுரந்தான், செந்துறை இரும்புலிக்குறிச்சி, குமிழியம், பரணம், உடையார்பாளையம், தத்தனூர், ஜெயங்கொண்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 400-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 15 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சில்வர் பாத்திரங்கள், குத்துவிளக்குகள், கட்டில், பீரோ, மின் விசிறி, செல்போன், வெள்ளி மற்றும் தங்க காசுகள், ரொக்கம் உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை கண்டுகளித்தனர்.
ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் புதுச்சாவடி கிராம மக்கள், ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மதியம் 3 மணிக்கு முடிவடைந்தது.