ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடு ;அதிகாரிகள் ஆய்வு

அலங்காநல்லூர்,பாலமேடு ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
Published on

அலங்காநல்லூர்,

மதுரை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு விழா வருகிற 16, 17-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் பாலமேட்டில் 16-ந் தேதியும், அலங்காநல்லூரில் 17-ந் தேதியும் ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. இதையொட்டி மாவட்ட கோட்டாட்சியர் முருகானந்தம், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் கணேசன், வாடிப்பட்டி தாசில்தார் கிருஷ்ணகுமார், போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த் ஆரோக்கியராஜ், கால்நடை உதவி மருத்துவர் சுரேஷ்குமார் மற்றும் பேரூராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தையும் மாடு நிறுத்தப்படும் வாடிவாசல் இடத்தையும், வீரர்கள், காளைகள் பதிவு செய்து பரிசோதனை செய்யப்படும் இடத்தையும், மாடுகள் வெளியேறிச் சென்று ஒன்று சேரும் இடத்தையும் அதிகாரிகள் பார்வையிட்டனர். இது தவிர தொடர்ந்து பாலமேட்டில் மஞ்சமலை ஆற்று திடலில் உள்ள வாடிவாசலையும் மாடுகள் செல்லும் பகுதிகளையும் கேலரி அமைக்கும் பகுதிகளையும் மாடுபிடி வீரர்கள் பதிவு செய்யும் இடத்தையும் பார்வையிட்டு வரைபடத்தை வைத்து ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து கோட்டாட்சியர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஜல்லிக்கட்டு விழா இரண்டு ஊர்களிலும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். 700 காளைகள் அனுமதிக்கப்படும். மேலும் மாடுபிடி வீரர்கள் சீருடை அணிந்தபடி அனுமதிக்கப்படுவார்கள். ஒரு மணி நேரத்திற்கு 80 நபர் வீதம் மைதானத்திற்குள் அனுப்பப்படும். சுமார் 650 மாடுபிடி வீரர்கள் மாடு பிடிக்க அனுமதிக்கப்படுவார்கள். 2 ஊர்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் இவ்வாறு அவர் கூறினார். பேரூராட்சி அலுவலர்கள் ஜல்லிக்கட்டு நடைபெறும் 2 மைதானத்தையும் சீரமைக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டுள்ளனர். அரசு அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது அலங்காநல்லூரில் விழா கமிட்டி குழுவினரும், பாலமேட்டில் கிராம பொது மகாலிங்கசுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com