ஏத்தாப்பூரில் இன்று ஜல்லிக்கட்டு அதிகாரிகளுடன் கலெக்டர் ராமன் ஆய்வு

ஏத்தாப்பூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ராமன், அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே ஏத்தாப்பூரில் இன்று (சனிக்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டில் 700-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகளும் பங்கேற்கின்றன. இதையொட்டி அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ராமன் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன் ஆகியோருடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, மாடுகள் வெளியே வரும் வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள் மாடம் அமைத்தல், மாடுபிடி வீரர்கள் பதிவு விவரம், பாதுகாப்பு ஏற்பாடுகள், தடுப்பு வேலிகள் அமைத்தல் உள்ளிட்டவை குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கலெக்டர் ராமன் கேட்டறிந்தார். மேலும், அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் ஏத்தாப்பூரில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராமன் கூறியதாவது:-

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் ஏத்தாப்பூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயார் நிலையில் உள்ளன. ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்து வருவதற்குரிய பாதைகளுக்கான தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து அதற்கான தகுதிச்சான்று மற்றும் அமரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை நிர்ணயித்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சுகாதாரத்துறையினர் மாடுபிடி வீரர்களின் உடற்கூறு தகுதியை ஆய்வு செய்து சான்றிதழ் அளிப்பதோடு, போதுமான மருத்துவர்கள் மற்றும் மருந்துகள், 108 ஆம்புலன்ஸ் வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்திடவும், உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்களால் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு உடற்கூறு தகுதி என சான்றளிக்கவும், மத்திய பிராணிகள் நல வாரியத்தால் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு ஊக்க மருந்துகளோ, போதை வஸ்துகளோ உட்கொள்ளப்பட்டுள்ளதா? என்பதை சோதித்து பார்க்கவும், காளைகள் போட்டியின் போது காயமடைந்தால் உரிய சிகிச்சை அளிக்க விளையாட்டுத்திடல் அருகில் போதுமான மருந்துகள், கால்நடை மருத்துவர்களுடன் மருத்துவ முகாம் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளையும், அரசின் விதிமுறைகளையும் முழுமையாக கடைபிடித்து ஜல்லிக்கட்டினை நடத்திட வேண்டும் எனவும் ஜல்லிக்கட்டு விழா குழுவினருக்கு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது ஆத்தூர் உதவி கலெக்டர் துரை, கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குனர் புருஷோத்தமன், ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜூ, கெங்கவல்லி தாசில்தார் சிவக்கொளுந்து, உலிபுரம் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் கருணாநிதி உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com