குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் ஜவாஹிருல்லா வேண்டுகோள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மயிலாடுதுறையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.
Published on

குத்தாலம்,

மயிலாடுதுறை சின்ன பள்ளிவாசல் தெருவில் நாகை வடக்கு மாவட்ட அனைத்து ஜமாத் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நேற்று 6-வது நாளாக இஸ்லாமிய அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்திற்கு பள்ளிவாசல் முத்தவல்லி சபிருதீன் தலைமை தாங்கினார். இதில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் இந்துக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. டெல்லியில் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தில் திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சட்டசபையில் தீர்மானம்

குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதம் தேசிய மக்கள் தொகை பதிவேடு எடுக்கப்படவுள்ளது. அதில் உங்கள் பெற்றோர் பிறந்த இடம், தேதி உள்ளிட்ட ஏராளமான கேள்விகள் கேட்கப்பட உள்ளன. இதன் அடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும். அதில்தான் ஆபத்து நிறைந்துள்ளது. இது சாதாரண மக்கள் தொகை கணக்கெடுப்பு அல்ல. எனவே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதுவரை எங்களின் போராட்டம் தொடரும்.

இந்த போராட்டத்தை எதிர்க்கட்சியினர் தூண்டிவிடுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவது தவறு. யாரும் தூண்டிவிட்டு போராட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. தமிழ்நாடு மட்டுமல்ல டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் இதுபோன்று போராட்டம் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

பேட்டி

இதில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் சித்திக், முன்னாள் எம்.பி. அப்துர் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன், மாவட்ட தலைவர் ஷேக்தாவூத், செயலாளர் பாசித், மனிதநேய ஜனநாயக கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜகான் மற்றும் பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நிருபர்களுக்கு ஜவாஹிருல்லா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இஸ்லாமிய மத குருமார்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தது வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே. நடிகர் ரஜினிகாந்த், குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி சரியாக புரியவில்லை. அவரை சிலர் தவறாக இயக்குகின்றனர் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com