ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விவசாயிகள் ஒரே நேரத்தில் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Published on

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இந்த விற்பனை கூடத்திற்கு தினசரி மணிலா, கடலை, எள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. அவ்வாறு கொண்டு வரப்படும் பொருட்களுக்கு ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் அன்றைய தினமே மதிப்பீடு மற்றும் விற்பனை செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படும்.

இந்த நிலையில் தற்போது கொரோனோ தொற்று பரவாமல் இருப்பதற்காக சமூக இடைவெளியை கடைபிடிக்க அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் விற்பனை கூடத்தில் ஒருவர் விற்பனை செய்யும் பொருளுக்கு 4 அல்லது 5 பேர் வருகின்றனர். இதனால் சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடிவதில்லை. மேலும் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஒரு நாளைக்கு 50 டோக்கன் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்க உத்தரவிட்டிருந்தார்.

50 பேருக்கு மட்டுமே டோக்கன்

இந்த நிலையில் விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் விற்பனை செய்ய தினசரி வந்து செல்வதால் ஒழுங்கு முறை விற்பனை கூட மேற்பார்வையாளர் அழகுதுரை விவசாயிகளிடம் இருந்து பொருட்களை பெற்று வந்தார். நேற்று திங்கட்கிழமை என்பதால் ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, ஆண்டிமடம், தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்வதற்காக வாகனங்களில் கொண்டு வந்திருந்தனர்.

கடந்த ஒரு மாதமாக 50 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கும் முறை பராமரிக்கப்பட்டு வந்தது. இதை அறியாத விவசாயிகள் நேற்று ஒரே நேரத்தில் வந்ததால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாமல் போனது. மேலும் பெரும்பாலான விவசாயிகள் முககவசம் அணியாமல் வந்திருந்தனர்.

வாக்குவாதம்

இதனால் மேற்பார்வையாளர் அழகுதுரை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் வாயிலிலேயே டோக்கன் இருப்பவர்களை மட்டும் உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார். அப்போது விவசாயிகள் நாங்கள் எல்லாம் வாகனங்களுக்கு வாடகை கொடுத்து வந்துள்ளோம். எங்களை உள்ளே விடாமல் இருப்பது முறையற்றது எனக்கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் முன்பு வாகனங்கள் குவிந்தன. இதனால் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அதிகாரிகள் மற்றும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வாகனங்களை வரிசைப்படுத்தி நிறுத்தக்கோரி உத்தரவிட்டனர். பின்னர் வரிசைபடி அனுப்பியும் உள்ளே ஏராளமானோர் கூடும் நிலை ஏற்பட்டது. இதனால் மீண்டும் ஒரு விவசாயியின் பொருளுக்கு ஒருவர் மட்டுமே உள்ளே வர வேண்டும் என உத்தரவிட்டு ஒரு பொருளுக்கு அதிகமாக வந்த ஆட்களை வெளியேற்றினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com