மதுரை,
மதுரை அண்ணாநகர் அன்புநகரை சேர்ந்தவர் கோபிநாத்(வயது 67). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் குற்றாலத்திற்கு சென்றார். இதனால் வீடு பூட்டிக்கிடப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 28 பவுன் நகைகள், ரூ.11 ஆயிரத்தை திருடிச் சென்றனர். பின்னர் கோபிநாத் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, நகைபணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் மதுரை தல்லாகுளம் விசாலாட்சிபுரத்தை சேர்ந்தவர் செந்தாமரைகண்ணன்(வயது 52). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் போராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டினுள் புகுந்த மர்மநபர்கள் உள்ளே பீரோவில் வைத்திருந்த ஒரு பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1,500ஐ திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.