இவை நீண்டதோர் பட்டியலாக அமையும். அவைகளில் நோபல் பரிசு, இந்திய அரசு அளிக்கும் பாரத ரத்னா, பத்ம பூஷண், பத்மஸ்ரீ, ஞான பீட விருது, தேசிய வீர தீர விருது, தாதா சாகிப் பால்கே விருது, கிராமிய விருது, எம்மி விருது, பன்னாட்டு காந்தி அமைதிப் பரிசு விருது, சாகித்ய அகாடமி விருது பரம்வீர் சக்ரா விருது, மகாவீர் சக்ரா விருது, வீர சக்ரா விருது, அசோகச் சக்ரா விருது, கீர்த்தி சக்ரா விருது, அர்ஜூனா விருது, யுனெஸ்கோ அமைதி விருது, டாக்டர் பி.சி.ராய் விருது, ஜி.டி.பிர்லா விருது, ஆஸ்கர் விருது என எண்ணற்றவை உள்ளன. இவ்விருதுகளில் நோபல் பரிசு, சாகித்ய அகாடமி விருது, ஞானபீட விருது ஆகிய விருதுகள் மொழி சார்ந்தவை.
நோபல் பரிசு சுவீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்பவர் பெயரில் வழங்கப்படுகிறது. நோபல் தம் சொத்தின் பெரும் பகுதியை இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் தொண்டு செய்தவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று உயிலாக எழுதினார். இவ்வரிசையில் தான் ரவீந்திரநாத் தாகூர், கீதாஞ்சலி படைப்பிற்கு நோபல் பரிசு பெற்றார். இன்று வரை நாம் இதனைப் பாராட்டிக் கொண்டிருக்கிறோம். நாமும் பெறத்தகுதி உடையவர்கள்.
சாகித்ய அகாடமி விருது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் அம்மொழிகளில் சிறந்த ஒரு படைப்பாளிக்கு இந்திய அரசின் சார்பு அமைப்பாக மார்ச் 12, 1954-ல் தொடங்கப்பட்ட நல்ல அமைப்பாகும். இலக்கிய மொழிகளின் சிறப்புகளையும், படைப்பாளிகளின் பன்முக ஆற்றல்களையும் பறைசாற்றும் சிறந்த நல்ல அமைப்பாகத் திகழ்கிறது.
ஆண்டுதோறும் இவ்விருது வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இன்று வரை சீராகச் சென்று கொண்டிருக்கிறது. தொடங்கியது முதல் கட்டமாக பத்து ஆண்டுகளுக்குரிய பட்டியலைப் பார்க்கும் போது 1955 தமிழின்பம் (ரா.பி.சேதுப்பிள்ளை), 1956 அலை ஓசை (கல்கி), 1958 சக்ரவர்த்தி திருமகன்(ராஜாஜி), 1961 அகல்விளக்கு (மு.வரதராசன்), 1962 அக்கரை சீமை (மீ.ப.சோமசுந்தரம்), 1963 வேங்கையின் மைந்தன்(அகிலன்), 1965 ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை சரிதம்(ப.ஸ்ரீ ஆச்சார்யா), 1966 வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (ம.பொ.சி), 1967 வீர ர்உலகம் (கி.வா.ஜெகந்நாதன்), 1968 வெள்ளைப்பறவை (கவிதை) அ.சீனிவாசராகவன். 1969 பிசிராந்தையார் (நாடகம்), (பாரதிதாசன்) என்ற வரிசைகளைப் பார்க்கும் போது மன நிறைவு ஏற்படுகிறது. இவருக்கு கொடுக்கப்படவில்லையே என்ற குறைபாடு பெரும்பாலும் எழுந்ததில்லை.
இந்திய படைப்புகளை மொழிமாற்றம் செய்து வெளியிடும் நற்பணியையும் இந்த அகாடமி செய்து வருகிறது. இவ்விருது அமைப்பு போல உயரிய மற்றொரு விருது ஞானபீட விருதாகும். இந்திய இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞான பீடவிருதினை பாரதீய பண்பாட்டு கழகம் நடத்தி வருகிறது. இவ்வறக்கட்டளையின் பெரும் நோக்கம் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளில் ஒரு சிறந்த படைப்பாளிக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்பதாகும். நிரசாத் ஜெயின் 1954-ல் இதனை தோற்றுவித்தார். பதிவுத் தொகை ஐந்து லட்சம் தங்கமும், பித்தளையும் கலந்து பாராட்டு பத்திரமும் பித்தளையால் ஆன கலைமகள் வாசு தேவி சிலையும் அளிக்கப்படுகிறது. 1965-ல் இந்த விருது முதன் முதலாக மலையாள எழுத்தாளர் ஸ்ரீசங்கரா குருப்பிற்கு வழங்கப்பட்டது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் எந்த மொழி எழுத்தாளரும் இந்த விருதுக்கு தகுதி உடையவர் என்பதாகும். இவ்விருது முதற்கட்டமாக ஒரு எழுத்தாளரின் குறிப்பிட்ட படைப்பை பாராட்டி வழங்கப்பட்டது. இம்முறை 1982 வரை இருந்தது. இப்பட்டியலில் எழுத்தாளர் அகிலன் முதன்முதலில் 1975-ல் சித்திரப்பாவை என்ற நூலுக்கு பரிசுபெற்றார்.
விருது பெற்ற எழுத்தாளர்கள் படைப்பை படைத்த மொழிகள் பற்றி மட்டும் இங்கு விவரம் தரப்படுகிறது. 1965 மலையாளம், 1966 வங்காளம், 1967 குஜராத்தி, 1968 இந்தி, 1969 உருது, 1970 தெலுங்கு, 1971 வங்காளம், 1972 இந்தி, 1973 கன்னடம், ஒரியா, 1974 மராத்தி, 1975 தமிழ், 1976 வங்காளம், 1977 கன்னடம், 1978 இந்தி, 1979 அசாம், 1980 மலையாளம், 1981 பஞ்சாபி, 1982 இந்தி.
இக்காலக்கட்டத்திற்கு பிறகு ஓர் எழுத்தாளர் தம் வாழ்நாளில் படைத்த இலக்கியங்கள் முழுமையும் பார்வையிட்டு இந்திய மொழிகளில் ஓர் எழுத்தாளரை தேர்ந்தெடுக்கும் விதி பின்பற்றப்பட்டது. அந்நெறிப்படி 1983 முதல் 2017 வரைகணக்கிட்டால் 36 ஆண்டுகளில் தமிழ்மொழிக்கு ஒரே ஒரு முறை 2002-ம் ஆண்டில் ஜெயகாந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக அலசிப்பார்த்தால் கன்னட எழுத்தாளர்கள் ஏழு முறையும், இந்தி மொழி எழுத்தாளர்கள் ஆறு முறையும் பெற்றிருக்கிறார்கள். வங்காளம், மலையாளம், மொழிகள் இரண்டு முறை அல்லது மூன்று முறை என்ற எண்ணிக்கையைத் தொடுகிறது. 2006-ம் ஆண்டு சத்தியவிரத் சாஸ்திரி சமஸ்கிருத மொழித் தொண்டிற்கு விருது பெற்றிருக்கிறார். இவ்விருது அளிப்பது 1965-ல் தொடங்கியது. 2018 வரை 50 ஆண்டுகளுக்குமேல் நடக்கும் இவ்விருதிற்கு தமிழ் மொழிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இரண்டு படைப்பாளிகள் மட்டுமே என்று எண்ணும் பொழுது வருத்தம் வாட்டி வதைக்கிறது.
தமிழ் அனைத்து மொழிகளுக்கும் மூத்தமொழி. அரசால் செம்மொழி என்று முதலில் முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அப்துல்கலாம், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரால் அவையில் அறிவிக்கப்பட்ட மொழி. தமிழ்மொழிக்கு தனியாக செம்மொழி நிறுவனம் உருவாக்கப்பட்ட பெருமையுடைய மொழி. நாடாளுமன்றத்தில் நிதியமைச்சரால் தமிழ் இலக்கியங்கள் எழுதப்பட்டு அவையின் மதிப்பை பெற்ற மொழி. பிரதமர் மோடி பல இடங்களில் மிகச்சிறப்பாக பேசிய மொழி. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலக மாநாடுகளில் பெருந்தலைவர்களால் எடுத்தாளப்படட மொழி. இனியாவது பன்மொழி அறிஞர்கள் செம்மொழி தமிழ் மீது கண்ணோட்டம் செலுத்துவார்களா? தகுதி மிக்க தமிழ் ஞானிகள் இனியாவது சிறப்பிக்கப்பட வேண்டும்.
- பேராசிரியர் ஆறு.அழகப்பன், முன்னாள் தமிழ்த்துறை தலைவர், அண்ணாமலை பல்கலைக்கழகம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சாகித்ய அகாடமி.