கச்சத்தீவையும் திரும்ப பெற வேண்டும் - மக்களவையில் ரவீந்திரநாத்குமார் எம்.பி. கோரிக்கை

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது போல், கச்சத்தீவையும் திரும்ப பெற வேண்டும் என மக்களவையில் ரவீந்திரநாத்குமார் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.
Published on

புதுடெல்லி,

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மசோதா மீது அ.தி.மு.க. எம்.பி.யான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

காஷ்மீர் மக்கள் சில பிரிவினைவாத சக்திகளால் ஒடுக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது? கவர்னர் ஆட்சியை அங்கு அமல்படுத்த முடியுமா? என்று ஜெயலலிதா 1984-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு இப்போது பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் விடை கொடுத்து உள்ளனர். இதற்கு அ.தி.மு.க. சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த மசோதா மூலம் காஷ்மீர் மக்கள் இனி இந்திய மண்ணின் சுதந்திரக்காற்றை சுவாசிப்பார்கள். பிரதமரின் புதிய இந்தியாவில் இந்த மசோதா ஒரு மைல்கல்லாக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.

அரசியல் லாபத்துக்காக தமிழகத்தில் இருந்த கச்சத்தீவை காங்கிரஸ் அரசு கடந்த 1974-ம் ஆண்டு இலங்கைக்கு கொடுத்துவிட்டது. எனவே காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது போல், கச்சத்தீவையும் மீட்டு மீண்டும் எங்களுக்கு (தமிழகத்துக்கு) பெற்றுத்தர வேண்டும் என்று உள்துறை மந்திரியிடம் கோரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com