கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலங்களில் அறுவடை செய்த தானியங்களை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். கடந்த 2 மாதங்களாக மழை பெய்ததால் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த பயிர்கள் அறுவடைக்கு வந்துள்ளன. இதனால் கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு தானியங்கள் வரத்து அதிகரித்து உள்ளது.
நேற்று 300 மூட்டை மக்காச்சோளம், 30 மூட்டை கம்பு, 50 மூட்டை மணிலா மற்றும் உளுந்து, எள், கேழ்வரகு, பச்சைப்பயறு, சோளம், தட்டைபயறு உள்ளிட்ட தானியங்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அவற்றை வியாபாரிகள் போட்டிப்போட்டு கொள்முதல் செய்தனர்.
இதில் 100 கிலோ எடை கொண்ட மக்காச்சோளம் மூட்டை அதிகபட்சமாக ரூ.1,796-க்கும், குறைந்த பட்சமாக ரூ.1,289-க்கும், கம்பு ஒரு மூட்டை(100 கிலோ) அதிக பட்சமாக ரூ.2,250-க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,289-க்கும், உளுந்து ஒரு மூட்டை(100 கிலோ) அதிகபட்சமாக ரூ.6,779-க்கும், குறைந்த பட்சமாக ரூ.5,399-க்கும், மணிலா மூட்டை(80 கிலோ) அதிக பட்சம் ரூ.6,106-க்கும், குறைந்த பட்சம் ரூ.5,111-க்கும், எள் ஒருமூட்டை(80 கிலோ) அதிகபட்சம் ரூ.8,250-க்கும், குறைந்த பட்சம் ரூ.7,569-க்கும் விற்பனையானது. அந்த வகையில் ஒரே நாளில் 9 லட்சம் ரூபாய்க்கு தானியங்கள் விற்பனையானது. இவற்றை கள்ளக்குறிச்சி பகுதியைச்சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச்சென்றனர்.
இத்தகவலை ஒழுங்குமுறை விற்பனைகூட கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.