அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
Published on

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம் பள்ள கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. காமராஜர் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற இந்த விழாவில், ஓவியப்போட்டி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியை மாவட்ட ஆயுத படை போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர நாராயணன், பள்ளி தலைமை ஆசிரியை மங்கையர்கரசி தொடங்கி வைத்து, வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி, காமராஜர் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகங்களையும் வழங்கினார். இதில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வடக்கு அரசு நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் ஹரிசுந்தரராஜ் தலைமை தாங்கினார். உதவி ஆசிரியை வானதி வரவேற்றார். தொடர்ந்து வினாடி-வினா, விடுகதைகள், பேச்சுபோட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் சிலம்பாட்டம் செய்து காட்டப்பட்டது. பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆண்டிமடம் அடுத்துள்ள விளந்தை (கிழக்கு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஆண்டிமடம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் நீலமேகம் தலைமை தாங்கினார். விழாவில் நடைபெற்ற போட்டியில் வெற்ற பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இதேபோல் ஆண்டிமடம் அருகே உள்ள சாலக்கரை பொன்னாங்கன்னி நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தரவடிவேலு தலைமையில், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தா.பழூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் பிளமன்ராஜ் தலைமை தாங்கினார். தொடர்ந்து காமராஜரின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதேபோல் தா.பழூரை அடுத்த மணகெதி அரசு நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சிலம்புச்செல்வி தலைமை தாங்கினார். கிராம கல்விக்குழு தலைவர் கஸ்தூரி முன்னிலை வகித்தார். விழாவில் காமராஜரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து காமராஜரின் படத்தை கைகளில் ஏந்தி அவரின் புகழை பரப்பியவாறு மணகெதியில் உள்ள முக்கிய வீதிகளில் மாணவ-மாணவிகள் ஊர்வலமாக வந்தனர். இதில் ஆசிரியர்கள் கண்ணன், நடராஜன், சுகந்தா, கவிதா, சாந்தி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்துள்ள ஓதியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மாணவ- மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பென்சில் பாக்ஸ், நோட்டு புத்தகம், எழுதும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஜீவரத்தினம், கூடுதல் தொடக்கக்கல்வி அலுவலர் லதா, தலைமை ஆசிரியர் மணிவண்ணன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com