3 முதல்-அமைச்சர்களை கண்ட காமராஜர் மணி மண்டபம் தயாராவது எப்போது?

3 முதல் அமைச்சர்களை கண்டபோதிலும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் காமராஜர் மணிமண்டபம் தயாராவது எப்போது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Published on

புதுச்சேரி,

புதுவையில் காங்கிரஸ் ஆட்சியின்போது பெருந்தலைவர் காமராஜருக்கு சிறப்பு செய்யும் வகையில் கல்வி நிலையங்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவருக்கு மகுடம் சூட்டும் விதமாக மணிமண்டபம் கட்டுவது குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக கருவடிக்குப்பத்தில் 3.75 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கின. இந்த மண்டபத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு பயிற்சி மையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டது. அதுமட்டுமின்றி தற்போது தொழில்நுட்ப படிப்புகளுக்கான சென்டாக் மாணவர் சேர்க்கையானது காலாப்பட்டு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் நடந்து வருகிறது. அந்த அலுவலகத்தை இங்கே கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மணிமண்டபத்திற்குள்ளாகவே ஒரே நேரத்தில் 150 மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் நூலகம், 130 பேர் அமரும் வகையில் ஆடிட்டோரியம் ஆகியவற்றுடன் வடிவமைக்கப்பட்டு கட்டுமானப்பணிகள் தொடங்கின. இதற்காக சுமார் ரூ.23 கோடியே 60 லட்சம் செலவில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஆனால் கடந்த 12 ஆண்டுகளாக இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. ஆனாலும் இதுவரை காமராஜர் மணிமண்டபம் கட்டும் பணி முடிந்தபாடில்லை. இதற்கு நிதிப்பற்றாக்குறையே காரணம் என்று கூறப்படுகிறது. அவ்வப்போது ஒதுக்கப்படும் நிதியில் பணிகள் நடந்து வருகின்றன.

கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மணிமண்டபம் கட்டும் பணிகள் அடுத்தடுத்து வைத்திலிங்கம், ரங்கசாமி, நாராயணசாமி என மாறி மாறி 3 முதல்-அமைச்சர்களை கண்டபோதிலும் இன்னமும் பணிகள் நிறைவடையாமலேயே உள்ளது.

பெருமளவு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது சிறிய அளவிலான பணிகள் உள்ளன. அதை விரைந்து முடித்து மணிமண்டபத்தை திறந்து காமராஜருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com