ஊட்டி,
ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்தி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம் வரவேற்று பேசினார். இதில் பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவ-மாணவிகள் பேசி அசத்தினர். மேலும் காமராஜரின் எளிய வாழ்க்கை முறையை சித்தரிக்கும் வகையில் நாடகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த காமராஜர் உருவப்படத்துக்கு மாணவ-மாணவிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் தொழிற்கல்வி ஆசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார்.
மசினகுடி அருகே உள்ள பொக்காபுரம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கண்ணதாசன் தலைமையில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் காமராஜரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் ஆதிவாசி மாணவர்கள் சிலர் காமராஜரை போன்று வேடம் அணிந்து விழாவில் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கூடலூரில் நேற்று பல்வேறு அமைப்புகள் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கூடலூர் நாடார் திருமண மண்டபத்தில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரின் உருவ படத்துக்கு சங்க தலைவர் முத்துசாமி, கவுரவ தலைவர் முத்துக்குட்டி, செயலாளர் பாஸ்கரன், நிர்வாகிகள் சிவசண்முக கணேசன், பாலகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் தங்கவேல், தங்கப்பழம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தலைமை ஆசிரியர் ராபர்ட் தலைமை தாங்கினார். ஆசிரியை விமலா வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் காமராஜர் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் காமராஜரின் செயல்பாடு குறித்து பலர் பேசினர். தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், பேச்சு, கவிதை, பாட்டு போட்டிகள் நடைபெற்றது. விழாவில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை டெய்சி விமலாராணி நன்றி கூறினார்.
கூடலூர் 2-ம் மைல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக மாணவர்கள், ஆசிரியர்கள் கொண்டாடினர். காமராஜரின் உருவ படத்துக்கு மலர் தூவி ஆசிரியர்கள், மாணவர்கள் மரியாதை செலுத்தினர். விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் நிர்மலாதேவி தலைமை தாங்கினார். ஆசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்றார். ஆசிரியைகள் பவுசியா, ருக்குமணி, தீபா, ஷீபா ஆகியோர் காமராஜர் கல்விக்கு ஆற்றிய தொண்டுகள் குறித்து விளக்கி பேசினர். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் ஆசிரியை செந்தில்குமாரி நன்றி கூறினார்.