கம்பம், சின்னமனூரில், நகைக்கடைகளில் வருமான வரி சோதனை - வரி ஏய்ப்பு புகாரில் அதிரடி நடவடிக்கை

கம்பம் மற்றும் சின்னமனூரில் உள்ள ஒரே நிறுவனத்தின் நகைக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
Published on

கம்பம்,

தேனி மாவட்டத்தில் தேனி, கம்பம், சின்னமனூர், போடி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான நகைக்கடைகள் உள்ளன. இந்த நகைக்கடைகளின் உரிமையாளர்கள், வருமான வரித்துறை அலுவலகத்தில் தங்களது நகைக்கடைகளின் கணக்குகளை சமர்ப்பித்து வருகிறார்கள். இதற்கிடையே வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக தமிழகத்தில் உள்ள நகைக்கடைகளில் சமீபகாலமாக வருமான வரித்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் சின்னமனூரை சேர்ந்த கோபால் என்பவருக்கு சொந்தமான கருப்பையா ஜூவல்லரி நிறுவனத்தின் கம்பம் வேலப்பர் கோவில் தெருவில் உள்ள நகைக்கடையிலும், சின்னமனூர் மெயின் பஜாரில் உள்ள மற்றொரு நகைக்கடையிலும் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

இந்த 2 நகைக்கடைகளுக்குள் நேற்று காலை 11 மணி அளவில் தேனி மாவட்ட வருமான வரித்துறை அலுவலர் அம்பேத்கர் தலைமையில் அதிகாரிகள் அதிரடியாக புகுந்தனர். ஒவ்வொரு கடைக்கும் 6 பேர் கொண்ட குழுவாக சென்ற அதிகாரிகள், கடைக்குள் சென்றதும் வாடிக்கையாளர்களை மட்டும் வெளியே அனுப்பினர். பின்னர் கடையில் உள்ள அனைத்து ஆவணங்களையும் சோதனை செய்தனர். அதனைத்தொடர்ந்து நகை விற்பனை குறித்து கடை ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் நகை கொள்முதல், விற்பனை, இருப்பு குறித்த ஆவணங்கள், கணினியில் பதிவு செய்யப்பட்ட கணக்குகள் உள்ளிட்டவை குறித்தும் அதிகாரிகள் செய்தனர்.

இந்த சோதனை குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, வரி ஏய்ப்பு சம்பந்தமாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. முழு சோதனை மற்றும் விசாரணை முடிந்த பிறகே மற்ற தகவல்களை தெரிவிக்க முடியும் என்றனர்.

இந்த திடீர் சோதனையால் கம்பம், சின்னமனூரில் உள்ள நகைக்கடை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com