புதுடெல்லி,
கர்நாடகத்தில் காவிரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் காவிரி கரையில் உள்ள சில நகரங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளும் சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் அதிக அளவில் கலக்கின்றன. குறிப்பாக பெங்களூர் நகரின் 80 சதவீத கழிவுகளும், கழிவு நீரும் காவிரியில்தான் கலக்கின்றன. ஆண்டுக்கு சுமார் 5 லட்சத்து 40 ஆயிரத்து 200 மில்லியன் லிட்டர் கழிவுகள் கர்நாடகத்தில் இருந்து காவிரி மூலம் தமிழகத்துக்கு வருகிறது.
அபாயகரமான கழிவுகளோடு தமிழகத்துக்கு வரும் காவிரி நீரில் விளையும் பயிர்களில் துத்தநாகம், ஈயம், காட்மியம், செம்பு போன்ற வேதிப்பொருள்களின் தன்மை அதிகம் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் காவிரி கரையோரம் வாழ்பவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள். கால்நடைகள் உள்ளிட்ட உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. எனவே, கர்நாடகத்தில் காவிரி கரையில் அமைந்துள்ள நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் பல்வேறு வகையான கழிவுகளை நேரடியாக ஆற்றில் கலக்கவிடாமல் கழிவுகள் கலந்த தண்ணீரை சுத்திகரித்த பிறகு மீண்டும் ஆற்றில் கலக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
இதுதொடர்பான வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்கனவே விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு காவிரியில் கழிவுநீர் கலக்கும் விவகாரம் குறித்து ஆய்வு செய்ய இரு மாநிலங்களுக்கும் பொதுவான நிபுணர் குழு ஒன்றை அமைப்பது குறித்து தமிழ்நாடும் கர்நாடகமும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இவ்வழக்கு தொடர்பான விசாரணையில் காவிரியை கர்நாடகம் மாசுபடுத்துவது தொடர்பாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
6 மாதங்களில் அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை சுப்ரீம் கோர்ட்டு கேட்டு உள்ளது.