தேனி அருகே மலைக்கோவிலில், கார்த்திகை தீபம் ஏற்றச்சென்ற பக்தர் அருவியில் தவறி விழுந்து சாவு

தேனி அருகே மலைக்கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றச் சென்ற பக்தர் அங்குள்ள அருவியில் குளித்தபோது, பாறையில் தவறிவிழுந்து பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
Published on

தேனி,

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் வசித்து வந்தவர் நடராஜ் (வயது 41). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருடைய சொந்த ஊர் தேனி அருகே உள்ள அரண்மனைப்புதூர். இவர் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை தீபத் திருநாளில், தேனி அருகே பூதிப்புரம் சன்னாசியப்பன் கோவில் அருகில் மரக்கா மலை உச்சியில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அதன்படி, நேற்று மலைக்கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக நடராஜ், தனது அண்ணன் வெள்ளைப்பிள்ளை மகன் ரமேஷ் என்பவருடன் பூதிப்புரம் வழியாக மலைக்கோவிலுக்கு நடந்து சென்றார். இந்த மலைக்கோவில் சுமார் 2 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. கரடு, முரடான ஆபத்தான மலைப்பாதை வழியாக தான் மேலே நடந்து செல்ல வேண்டும்.

இந்த மலைப்பகுதியில் வெள்ளி விழுந்தான் கேணி அருவி உள்ளது. மலைப்பாதையில் 2 பேரும் நடந்து சென்று கொண்டிருந்தபோது அருவியை பார்த்ததும், அதில் 2 பேரும் குளித்தனர். அருவியில் குளித்த பின்னர் அவர்கள் மலைக்கு மேலே ஏறினர். அப்போது திடீரென்று நடராஜ், கால் தவறி அருவிக்கு கீழே இருந்த பாறையில் விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை பார்த்த ரமேஷ், அவரை மீட்டு அருகில் உள்ள ஒரு பாறையில் படுக்க வைத்து விட்டு, மீட்பு பணிக்கு உதவி கேட்டு மலையில் இருந்து இறங்கி வந்துள்ளார்.

பின்னர் அவர் இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பின்னர், தேனி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து தேனி தீயணைப்பு படை வீரர்கள் 6 பேர் கொண்ட குழுவினரும், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களும் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள் அங்கு செல்வதற்குள், நடராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அவருடைய உடலை மலைப்பாதை வழியாக தீயணைப்பு படைவீரர்கள் தூக்கி வந்தனர். பின்னர் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com