காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து எதிரொலி: நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையொட்டி நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Published on

நெல்லை,

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அதே நேரத்தில் இந்து முன்னணி, பாரதீய ஜனதா கட்சியினர் உள்ளிட்டோர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். இந்த நிலையில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க நெல்லை மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் ஆகியோர் உத்தரவின் பேரில் தென்காசி, கடையநல்லூர், ஏர்வாடி, புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விடிய விடிய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன், துணை போலீஸ் கமிஷனர் சரவணன் ஆகியோர் உத்தரவின் பேரில் மாநகர பகுதியில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம், சந்திப்பு பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் மற்றும் வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு, ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலப்பாளையம், பேட்டை, டவுன், சந்திப்பு பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய நுழைவு வாசலில், பயணிகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். நெல்லை மீனாட்சிபுரத்தில் உள்ள தாமிரபரணி ரெயில்வே பாலம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நெல்லையப்பர் கோவில் நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் கருவி அமைக்கப்பட்டு, பக்தர்கள் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

இதற்கிடையே, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அபய்குமார் சிங் நேற்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன், துணை போலீஸ் கமிஷனர் சரவணன், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் கூறுகையில், நெல்லை மாநகர பகுதியில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சிறப்பு ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com