சிறப்பு அந்தஸ்தை நீக்கியதால் காஷ்மீர் மக்கள் மகத்தான பலன்களை பெறுவார்கள் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

சிறப்பு அந்தஸ்தை நீக்கியதால் காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் மகத்தான பலன்களை பெறுவார்கள் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை வெளியிட்டு உள்ளார்.
சிறப்பு அந்தஸ்தை நீக்கியதால் காஷ்மீர் மக்கள் மகத்தான பலன்களை பெறுவார்கள் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை
Published on

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது. இதைப்போல அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்க வகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்கு காஷ்மீரிலும், வெளியேயும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை காஷ்மீருக்கு பலன்களை பெற்றுத்தரும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை வெளியிட்டு உள்ளார்.

சுதந்திரதினத்தை முன்னிட்டு நேற்று அவர் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் இது தொடர்பாக கூறுகையில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கில் சமீபத்தில் செய்யப்பட்டு உள்ள மாற்றங்கள் (சிறப்பு அந்தஸ்து நீக்கம், மாநில பிரிவினை), அந்த பிராந்திய மக்களுக்கு மகத்தான பலன்களை பெற்றுத்தரும் என நான் நம்புகிறேன். நாட்டின் பிற பகுதியை சேர்ந்தவர்கள் அனுபவித்து வரும் உரிமைகள், சலுகைகள் மற்றும் வசதிகளை காஷ்மீர், லடாக் பிராந்திய மக்களும் இதன் மூலம் அனுபவிக்க வழி ஏற்படும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

இதைப்போல சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குறித்தும் ஜனாதிபதி மகிழ்ச்சி வெளியிட்டார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, சமீபத்தில் உருவாக்கப்பட்ட சட்டங்களும், ஏற்கனவே இருந்தவற்றில் ஏற்படுத்தப்பட்ட திருத்தங்களும் மக்களுக்கு நிறைந்த பயன்களை தரும். குறிப்பாக கல்வி உரிமை; தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல்களை அறிந்து கொள்ளுதல்; பின்தங்கியவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு; முத்தலாக் முறையை அகற்றியதன் மூலம் நமது மகள்களுக்கு நீதி கிடைத்தல் போன்ற வாய்ப்புகள் ஏற்பட்டு இருக்கிறது என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com