

சென்னை,
சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டசபை வைரவிழா மற்றும் 94-வது பிறந்தநாள் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சினிமா பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து பங்கேற்று, திரையாண்ட கலைஞர் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் எழுத்தாற்றல் என்பது 20-ம் நூற்றாண்டு மட்டுமின்றி, 21-ம் நூற்றாண்டு வரை ஒரு பெரும் தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது. எப்போதோ வெளியாகியிருக்கும் ஒரு திரைப்படத்தை நாம் தொடர்ந்து நினைவில் வைக்கக் காரணம் பாடல்கள் தான்.
பல சிறப்புகளுக்குரிய வைரமுத்துவுக்கு, கவிப்பேரரசு என்ற பட்டத்தை வழங்கியவர் கலைஞர் தான். தன்னுடைய ஒவ்வொரு வெற்றியிலும் தன்னுடைய ஆசான் கருணாநிதி ஊட்டிய உணர்வு நிலைத்திருப்பதை மறக்காமல் குறிப்பிட்டுக் காட்டக்கூடியவர் நம்முடைய கவிஞர் வைரமுத்து.
வைரமுத்துவை வாழ்த்துகிற நேரத்தில் நாங்களும் பெருமைப்படுகிறோம் என்ற உணர்வோடு வாழ்த்துகிறோம். சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொழிவதுபோல கலைஞரின் திரைப்படைப்புகள் குறித்த கவிப்பேரரசின் தித்திக்கும் தமிழை கேட்டு மகிழ்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.