‘வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைக்க வேண்டும்’ கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

வீடுத்தோறும் கழிப்பறைகள் இருக்க வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் நடராஜன் பேசினார்.
Published on

மதுரை,

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடந்தது. மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், சத்திரப்பட்டி கிராமத்தில் அரசுப்பள்ளியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் நடராஜன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால் மதுரை மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. கல்வி ஒன்றே அடிப்படை வளர்ச்சிக்கு முக்கியமானதாகும். எனவே பொது மக்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள 420 கிராம ஊராட்சிகளிலும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிட மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் நோய்களிலிருந்து தங்களையும், தங்களது குழந்தைகளையும் பாதுகாத்துக்கொள்ள முடியும். பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் திறந்தவெளியில் மலம் கழித்தல் கூடாது. சத்திரப்பட்டி ஊராட்சி திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத ஊராட்சியாக மாற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைவரும் தங்களது இல்லங்களில் கட்டாயம் தனிநபர் இல்லக்கழிப்பறையினை கட்டிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com