கேரளாவில் மேலும் 127 பேருக்கு கொரோனா தொற்று - முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் மேலும் 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
Published on

திருவனந்தபுரம்,

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ள நிலையில், இந்தியாவில் முதன் முதலில் கொரோனா தொற்று பதிவான கேரளாவில், சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டது.

இதையடுத்து வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் கேரளாவில் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று மேலும் 127 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,039 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆக உள்ளது.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 87 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 36 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். மேலும் 57 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 24 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 23 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 17 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 12 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 11 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், 7 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 6 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், தலா 5 பேர் மலப்புரம், வயநாடு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களையும், தலா 4 பேர் கண்ணூர் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களையும், 3 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், ஒருவர் இடுக்கி மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com