தீ விபத்தில் பலியானதாக தகவல்: சூடான் நாட்டுக்கு வேலைக்கு சென்ற நாகை வாலிபரின் கதி என்ன? உயிர்தப்பிய ‘வீடியோ’ காட்சியால் உறவினர்கள் குழப்பம்

சூடான் நாட்டில் நடந்த தீ விபத்தில் நாகை வாலிபர் ஒருவர் பலியானதாக தகவல் வந்த நிலையில் அவர் விபத்து நடந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறி உயிர்தப்பியது போன்ற ‘வீடியோ’ காட்சியால் அவருடைய உறவினர்கள் மிகவும் குழப்பம் அடைந்துள்ளனர்.
தீ விபத்தில் பலியானதாக தகவல்: சூடான் நாட்டுக்கு வேலைக்கு சென்ற நாகை வாலிபரின் கதி என்ன? உயிர்தப்பிய ‘வீடியோ’ காட்சியால் உறவினர்கள் குழப்பம்
Published on

நாகப்பட்டினம்,

சூடான் நாட்டில் இயங்கி வரும் செராமிக் தொழிற்சாலையில் கியாஸ் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 18 பேர் இந்தியர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த கோர விபத்தில் அந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள ஆலங்குடிச்சேரி கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது25) என்பவரும் பலியானதாக அவருடைய பெற்றோருக்கு நேற்று முன்தினம் இரவு முதல் கட்ட தகவல்கள் வந்தன. இதன் காரணமாக அவருடைய உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை ராமகிருஷ்ணனின் சகோதரர் பிரபாகரனின் செல்போனுக்கு சூடானில் உள்ள தொழிற்சாலையில் பதிவானதாக கூறப்படும் சில வீடியோ காட்சிகள் வந்தன. அதில் தீ விபத்து ஏற்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு ராமகிருஷ்ணன் அங்கிருந்து வெளியேறி செல்வது போல் காட்சிகள் பதிவாகி உள்ளன. அவர் விபத்தில் சிக்காமல் உயிர்தப்பி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த வீடியோ காட்சிகளை பார்த்த ராமகிருஷ்ணனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். அதேநேரத்தில் ராமகிருஷ்ணனிடம் இருந்து எந்த அழைப்பும் அவருடைய பெற்றோருக்கு வரவில்லை. இதனால் குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது. உண்மையில் அவர் இறந்து விட்டாரா? அவ்வாறு இல்லை எனில் அவர் எங்கு உள்ளார்? என்பது மர்மமாக உள்ளது.

ராமகிருஷ்ணனின் கதி என்ன? என்பதை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமகிருஷ்ணனின் பெற்றோர் ராமலிங்கம்-முத்துலட்சுமி, சகோதரி திலகா மற்றும் உறவினர்கள் நேற்று நாகை கலெக்டர் பிரவீன் நாயரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தீ விபத்து நடப்பதற்கு முன்பாக ராமகிருஷ்ணன் வெளியேறும் வீடியோ காட்சி எங்களுக்கு கிடைத்துள்ளது. எனவே ராமகிருஷ்ணன் உயிருடன் தான் இருக்கிறார் என நம்புகிறோம். ஆனால் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. தொழிற்சாலையில் நடந்த தீ விபத்து குறித்த தகவல்களை வெளியே சொல்லிவிடுவார் என்பதற்காக ராமகிருஷ்ணனை வேறு யாராவது பிடித்து வைத்து கொடுமைப்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே அவருடைய கதி என்ன? என்பதை அறிந்து அவரை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே ராமகிருஷ்ணனின் சகோதரி திலகா இந்திய தூதரகத்துக்கு ஒரு மனு அனுப்பி உள்ளார். அதில், ராமகிருஷ்ணனை தொடர்பு கொண்டு பேச உதவ வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com