கொடைக்கானல் மலைப்பாதையில், வீட்டின் மீது பாய்ந்த சரக்கு வேன் - புதுமாப்பிள்ளை பலி

கொடைக்கானல் மலைப்பாதையில் வீட்டின் மீது சரக்கு வேன் பாய்ந்ததில் புதுமாப்பிள்ளை பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
Published on

கொடைக்கானல்,

கொடைக்கானலில் இருந்து மதுரை செல்லும் மலைப்பாதையில் லாஸ்காட்சாலையில் அரசு மருத்துவமனை அருகே ஞாயிற்றுக்கிழமைதோறும் வாரச்சந்தை நடப்பது வழக்கம். இந்த சந்தையில் விற்பனை செய்வதற்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் கொண்டு வரப்படுகிறது.

அதன்படி தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 31) என்பவர், நேற்று மதுரையில் இருந்து சரக்கு வேனில் மீன்களை ஏற்றிக்கொண்டு சந்தைக்கு கொண்டு வந்தார். அந்த சரக்கு வேனை மஞ்சளாறு பகுதியை சேர்ந்த அருண்குமார் (25) ஓட்டி வந்தார். இந்த வாகனத்தில், அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (56) ஒச்சாதேவர் (20) ஆகியோர் உடன் வந்தனர்.

இதனிடையே அந்த சரக்கு வேனை, கொடைக்கானல் லாஸ்காட் சாலை அரசு மருத்துவமனை அருகே மலைப்பாதையோரத்தில் நிறுத்தி விட்டு டிரைவர் சென்றார். மீனை இறக்க வேண்டிய நேரம் என்பதால் வேனில் ஹேண்ட் பிரேக் போடப்பட்டு நிறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் அதிக பாரம் இருந்ததால் ஹேண்ட் பிரேக் விடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது பின்புறமாக தாறுமாறாக ஓடிய சரக்கு வேனை ராஜ்குமார் நிறுத்த முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக சரக்கு வாகனத்தின் அடிப்பகுதியில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே சரக்கு வாகனம் சாலையோரத்தில் உள்ள சுரேஷ் என்பவரின் வீட்டின் மீது பாய்ந்தது. இந்த விபத்தில் சரக்கு வேனில் இருந்த சந்திரசேகர், ஒச்சாதேவர் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொடைக்கானல் தீயணைப்பு படையினரும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான ராஜ்குமாரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் வீட்டின் மீது பாய்ந்து கிடந்த சரக்கு வேன் மீட்கப்பட்டது. நல்லவேளையாக சரக்கு வேன் பாய்ந்த சமயத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்தில் இறந்த ராஜ்குமாருக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆவது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com