கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு வளைகாப்பு சக போலீசாரே நடத்தினர்

பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு செல்லும் முன் தனக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுமா? என்ற வேதனையில் இருந்தார்.
கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு வளைகாப்பு சக போலீசாரே நடத்தினர்
Published on

பெரம்பூர்,

சென்னை கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையத்தில் மகாலட்சுமி என்ற பெண் போலீஸ், 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆகும். 2008-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த இவர், தனது கணவருடன் சென்னையில் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கர்ப்பமான மகாலட்சுமி, தனது உறவினர்கள் யாரும் சென்னையில் இல்லாததாலும், வெளி மாவட்டங்களில் உள்ள அவர்களை சென்னைக்கு வரவழைக்க விரும்பாததாலும் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு செல்லும் முன் தனக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுமா? என்ற வேதனையில் இருந்தார்.

இதையடுத்து மகாலட்சுமிக்கு போலீஸ் நிலையத்திலேயே வளைகாப்பு நடத்த சக போலீசார் முடிவு செய்தனர். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோமலவள்ளி, சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீஸ் நிலையத்தில் மகாலட்சுமி மற்றும் அவருடைய கணவரை அமர வைத்து, இருவருக்கும் மாலை அணிவித்தனர். மகாலட்சுமிக்கு பூ, குங்குமம் வைத்து, கையில் வளையல்கள் போட்டு போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சீர்வரிசை தட்டுகளுடன் 5 வகை சாதம் கலந்து நலங்கு வைத்து முறைப்படி வளைகாப்பு நடத்தினர்.

பொதுவாக போலீஸ் நிலையத்தில் காதல் திருமணங்கள், காதல் ஜோடியை இணைத்து வைக்கும் சம்பவங்கள் நடக்கும். ஆனால் பெண் போலீஸ் ஒருவருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com