

கோவில்பட்டி,
சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
காலிக்குடங்களுடன் முற்றுகை
கோவில்பட்டியை அடுத்த பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்து ராஜீவ்நகர், இ.பி.காலனி பகுதி மக்கள் நேற்று காலிக் குடங்களுடன் திரண்டு சென்று கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்களது பகுதியில் சீராக குடிநீர் வழங்க கோரி கோஷங்கள் எழுப்பினர். அவர்களுடன் யூனியன் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரதிநிதிகள் யூனியன் ஆணையாளர் மாணிக்கவாசகத்திடம் கோரிக்கை மனு வழங்கினர்.
அந்த மனுவில், இ.பி.காலனி கற்பக விநாயகர் கோவில் வளாகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. பின்னர் அதனை கடந்த 7 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டனர். தற்போது தங்களது பகுதியில் மாதம் இரு முறை மட்டுமே தெருக்குழாயில் சீவலப்பேரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனந்தம் நகரில் சிலர் முறைகேடாக சீவலப்பேரி குடிநீர் இணைப்பு பெறுவதற்காக பள்ளம் தோண்டி, குழாய் பதித்தனர். இதனை அறிந்த பொதுமக்கள் அதனை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்திலும், யூனியன் அலுவலகத்திலும் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உண்ணாவிரத போராட்டம்
எனவே தங்களது பகுதிக்கு சீராக குடிநீர் வழங்க வேண்டும். 7 ஆண்டுகளாக காட்சி பொருளாக உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீரை நிரப்பி, பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும். முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கோவில்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மனுவை பெற்று கொண்ட யூனியன் ஆணையாளர், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தில் கோவில்பட்டி ராஜீவ்நகர், இ.பி.காலனி மக்கள் நலச்சங்க தலைவர் சங்கையா, செயலாளர் அய்யாத்துரை, பொருளாளர் கடற்கரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.