சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆதாரமற்ற கருத்துகள்
தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா தூத்துக்குடியில் உரையாற்றும்போது நாடாளுமன்றத் தேர்தலில் 30 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று பேசியிருக்கிறார். தமிழகத்தைப் பொறுத்தவரை வெற்றி வாய்ப்பு குறித்து கனவு காண்பதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அதே நேரத்தில் உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற கருத்துக்களை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எதிராக கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்க விரும்புகிறேன். அதேபோல, சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை பற்றியும் அமித்ஷா அவதூறான கருத்தை கூறியிருக்கிறார்.
அதிகாரத்தை பயன்படுத்தி...
அரசியல் ரீதியாக நரேந்திரமோடி அரசை கடுமையாக விமர்சனக் கணைகளை ஏவுகணைகளாக ஏவிவருகிற முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் ஆணித்தரமான குற்றச்சாட்டுக்களை மறுக்க முடியாத பா.ஜ.க.வினர் அவதூறு சேற்றை அள்ளி வீசி வருகிறார்கள். கார்த்தி சிதம்பரம் மீது இருப்பது மத்திய பா.ஜ.க. அரசு தொடுத்திருக்கும் குற்றச்சாட்டே தவிர, வழக்கல்ல. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் எந்த நீதிமன்றத்திலும் விசாரணையும் நடைபெறவில்லை. இந்நிலையில் அவர்மீது ஊழல் குற்றச்சாட்டு கூறுவதற்கு அமித்ஷாவுக்கு என்ன தகுதியிருக்கிறது?.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பா.ஜ.க.வோடு கூட்டணி சேர எந்த கட்சியும் முன்வராத நிலை இருந்தது. இந்நிலையில் அதிகாரத்தை பயன்படுத்தி சாம, பேத, தான, தண்டங்களை கடைப்பிடித்து அ.தி.மு.க.வை பா.ஜ.க.வின் கூட்டணியில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இப்படி கூட்டணி அமைத்தவர்கள் கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைத்த காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைப் பற்றி பேச பா.ஜ.க.வினருக்கு என்ன உரிமை இருக்கிறது?.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.