ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்குவதுடன் காங்கிரஸ் தலைவர்கள் கட்டுப்பாட்டில் குமாரசாமி இருக்கிறார் - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி

ரிமோட் கன்ட்ரோல் மூலம் முதல்-மந்திரி குமாரசாமி இயக்கப்படுவதுடன், காங்கிரஸ் தலைவர்களின் கட்டுப்பாட்டில் தான் அவர் உள்ளார் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நேற்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்குவதுடன் காங்கிரஸ் தலைவர்கள் கட்டுப்பாட்டில் குமாரசாமி இருக்கிறார் - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரியாக குமாரசாமி இருந்து வருகிறார். அவரை காங்கிரஸ் தலைவர்கள் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்குகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியும் இதை தான் சொல்லி வருகிறார். அது உண்மையானது. ஏனெனில் காங்கிரஸ் தலைவர்களின் கட்டுப்பாட்டில் தான் முதல்-மந்திரி குமாரசாமி இருக்கிறார். பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசில் பிரதமர் நரேந்திர மோடி யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தார் என்பதை இந்த நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். அதுபோல, பிரதமர் நரேந்திர மோடி இல்லை. பா.ஜனதா ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்துள்ளது. விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதற்கு காங்கிரஸ் அரசு எந்த பதில் தாக்குதலும் நடத்தவில்லை. பயங்கரவாதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புலவாமாவில் துணை ராணுவப்படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதற்கு நமது ராணுவத்தினர் பயங்கரவாதிகள் மீது உடனடியாக தாக்குதல் நடத்தி தக்க பதிலடி கொடுத்தனர்.

கர்நாடகத்தில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சரியான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி பதவி ஏற்பார்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com