குடிமங்கலம் பகுதியில் கோடையில் கை கொடுக்கும் எலுமிச்சை சாகுபடி; விவசாயிகள் மகிழ்ச்சி

குடிமங்கலம் பகுதியில் கோடையில் எலுமிச்சை சாகுபடி விவசாயிகளுக்கு கை கொடுக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Published on

போடிப்பட்டி,

கோடை காலம் பிறந்து விட்டாலே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிடும்.இதனால் வீட்டை விட்டே வெளியே வர பொதுமக்கள் தயங்கும் நிலை ஏற்படுகிறது.ஆனாலும் வழக்கமான பணிகளை முடித்தாக வேண்டிய கட்டாயத்தில் வெளியே வரவேண்டிய நிலை ஏற்படுகிறது.அந்தநேரங்களில் உடல் வெப்பம் அதிகரித்து நீரிழப்பு ஏற்படாமல் தடுக்க அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும்,குளிர்ச்சியான பொருட்களை உண்ணவும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதனால் குளிர்ச்சி தரும் பொருட்களான தர்பூசணி,நுங்கு,முலாம்பழம்,வெள்ளரி போன்றவற்றின் விற்பனை கோடை காலங்களில் பல மடங்கு அதிகரிக்கிறது.அத்துடன் எலுமிச்சை,சாத்துக்குடி,ஆரஞ்சு போன்றவற்றின் விற்பனையும் அதிகரிக்கிறது.

இவற்றில் தர்பூசணி, வெள்ளரி, முலாம்பழம் போன்றவற்றின் வரத்து கோடைகாலங்களில் அதிகம் இருக்கும்.ஆனால் எலுமிச்சை போன்றவை கோடையில் குறைவாகவே மகசூல் தருவதால் விலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் எலுமிச்சைக்கு நல்ல விலை கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து குடிமங்கலத்தை அடுத்த ஆலாமரத்தூரில் எலுமிச்சை சாகுபடி செய்துள்ள விவசாயி ஜெகதீஸ் கூறியதாவது:-

எலுமிச்சை சாகுபடியை பொறுத்தவரை குறைந்த தண்ணீர் இருந்தால் போதுமானது.இதனால் வேலூர், ஜோலார்பேட்டை பகுதியிலிருந்து ஒரு நாற்று ரூ.180 என்ற விலையில் வாங்கி வந்து 15 அடிக்கு 15 அடி என்ற இடைவெளியில் நடவு செய்துள்ளோம்.அந்த வகையில் ஒரு ஏக்கருக்கு 125 செடிகள் நடவு செய்யலாம்.

தற்போது நாங்கள் அரை ஏக்கரில் 50 செடிகள் மட்டும் நடவு செய்துள்ளோம்.எலுமிச்சை நடவு செய்து மூன்று ஆண்டுகளில் பலன் கொடுக்கத் தொடங்குகிறது. வாரத்துக்கு 3 நாட்கள் பழங்களை பறிக்கலாம்.அந்தவகையில் தற்போது 50 செடிகளிலிருந்து வாரம் 80 கிலோ மகசூல் கிடைக்கிறது.

அதேநேரத்தில் மழைக்காலங்களில் இருமடங்கு மகசூல் கிடைக்கும்.அறுவடை செய்யப்படும் எலுமிச்சம்பழங்களை உடுமலை சந்தையில் கொண்டு சென்று விற்பனை செய்கிறோம்.தற்போது ஒரு கிலோ எலுமிச்சம்பழம் ரூ.30-க்கு விற்பனையாகிறது.ஆனால் கோடை வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் வரும் நாட்களில் விலையும் அதிகரிக்க தொடங்கிவிடும்.

அந்தவகையில் கடந்த காலங்களில் ஒரு கிலோ எலுமிச்சம்பழம் ரூ.100 வரை விற்பனையானது.எலுமிச்சம்பழங்களை பொறுத்தவரை ஜூஸ் தயாரிப்புக்கு மட்டுமல்லாமல் ஊறுகாய் போன்றவற்றைத் தயாரிக்கவும் பயன்படுகிறது.அதுமட்டுமல்லாமல் பெரும்பாலான உணவுப்பொருட்களில் எலுமிச்சம்பழங்களின் பங்கு உள்ளது.இதனால் ஆண்டு முழுவதும் எலுமிச்சம்பழங்களுக்கு தேவை உள்ளதால் சீரான விலை கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கோடைகாலம் வந்துவிட்டாலே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுமா,வெயிலின் தாக்கத்தால் பயிர் பாதிப்பு ஏற்படுமா என்று விவசாயிகள் தவிக்கும் நிலை உள்ளது.இந்தநிலையில் கோடையிலும் குறைந்த அளவு தண்ணீரில் மகசூல் கொடுக்கும் இது போன்ற பயிர்களைத்தேர்வு செய்வதன் மூலம் நல்ல மகசூலும் கிடைக்கும்.கூடுதல் லாபமும் கிடைக்கும் என்பதை உணர்ந்து விவசாயிகள் தங்கள் நிலத்துக்கான பயிரைத்தேர்வு செய்தால் விவசாயம் கண்டிப்பாக லாபகரமான தொழிலாகவே இருக்கும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com