டெல்லி பல்கலைக்கழக தாக்குதலுக்கு தலைவர்கள் கண்டனம்

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஒவ்வொரு அதிருப்தி குரலையும் மோடி அரசு ஒடுக்கி வருகிறது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் குரல் நசுக்கப்படுகிறது. டெல்லி பல்கலைக்கழகத்தில் நடந்த எலும்பை உறையவைக்கும் தாக்குதல் இதைத்தான் நினைவூட்டுகிறது.

குண்டர்கள் நடத்திய இந்த திகிலூட்டும் தாக்குதலுக்கு மோடி அரசின் ஆதரவும் இருக்கிறது. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காங். செய்தித்தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா:- இந்த தாக்குதல், நாஜிக்கள் ஆட்சியை நினைவுபடுத்துகிறது. பணியில் உள்ள நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். அரசு, பல்கலைக்கழக நிர்வாகம், டெல்லி போலீஸ் ஆகியவற்றின் பங்கையும் விசாரிக்க வேண்டும்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்:- இது கோழைத்தனமான, திட்டமிட்ட தாக்குதல். ஜனநாயக மாண்புகளை ஒடுக்க வன்முறையை பயன்படுத்துவது வெற்றி தராது.

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி:- மாணவர்கள் மீதான பா.ஜனதாவின் பாசிச தாக்குதல். மாணவர் தலைவராக இருந்த நான், மாணவர்கள் மீது இத்தகைய அப்பட்டமான தாக்குதலை பார்த்ததே இல்லை.

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே:- 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை இது நினைவுபடுத்தியது. மராட்டியத்தில் மாணவர்களை துன்புறுத்த அனுமதிக்க மாட்டேன். மாணவர்கள் பாதுகாப்பற்ற உணர்வில் இருக்கின்றனர்.

ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்:- ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. மாணவர்கள் மீதான தாக்குதலை அனைவரும் கண்டிக்க வேண்டும். குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க வேண்டும்.

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி:- இந்த தாக்குதல் வெட்கக்கேடானது. மத்திய அரசு, இதை தீவிரமாக எடுத்துக்கொண்டு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்:- அச்சத்தின் மூலம் நாட்டை ஆள அரசு எந்த அளவுக்கு கீழிறங்கும் என்பதை இத்தாக்குதல் காட்டுகிறது. சமூகத்தை பிளவுபடுத்த வன்முறையையும், வெறுப்பையும் பா.ஜனதா பயன்படுத்துகிறது.

ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய்சிங்:- தலைநகரில் நடந்த இந்த தாக்குதலால் உலகமே நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறது. உலகத்துக்கு நாம் என்ன சொல்கிறோம்? மத்திய அரசு உடனே தலையிட்டு அமைதியை உண்டாக்க வேண்டும்.

ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதின் ஒவைசி:- இந்த தாக்குதல் தலைநகரில் நடந்துள்ளது, எங்கேயோ கிராமத்தில் நடக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் ஆட்களை திரட்டும்போது, சைபர் பிரிவு போலீசார் என்ன செய்து கொண்டிருந்தனர்? மத்திய அரசு தனது அரசியல் சட்ட கடமையை நிறைவேற்ற வேண்டும். நீதியை நிலைநிறுத்த வேண்டும்.

இவ்வாறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மாநிலங்களவை தி.மு.க. தலைவர் திருச்சி சிவா எம்.பி. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு நேரில் சென்று தாக்குதல் நடைபெற்ற இடங்களை பார்வையிட்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களையும் சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், தாக்குதல் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி. நேற்று மாலை ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு நேரில் சென்று தாக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலங்களவை எம்.பி. டி.ராஜா நிருபர்களை சந்தித்தபோது, இந்த தாக்குதல் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா உரிய பதில் அளிக்க வேண்டும் என்றார்.

இதுபோல ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி., மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஊடக தலைவர் முகம்மது ஷம்மூன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com