திருவள்ளூரில் கடன் தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் சாலைமறியல்

திருவள்ளூர் அருகே கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்தவர்களிடம் இருந்து பணத்தை திருப்பி வாங்கித்தர வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த காக்களூரில் தனியார் நிதிநிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிதி நிறுவனத்தினர் அரசு அங்கீகாரம் பெற்றது எனவும், குறைவான வட்டியில் கடன் தருவதாகவும் கூறி விளம்பரம் செய்தனர். கடந்த 6 மாதங்களாக இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதை அறிந்த திருவள்ளூர், காக்களூர், புட்லூர், தண்ணீர்குளம், தொழுவூர், செவ்வாப்பேட்டை, பட்டாபிராம், தொட்டிக்கலை, ஆவடி, மணவாளநகர் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் அந்த நிதி நிறுவனத்தில் கடன் பெற குவிந்தனர்.

அப்போது நிதி நிறுவன ஊழியர்கள் ரூ.1 லட்சம் கடன் பெற ரூ.5 ஆயிரமும், ரூ.10 ஆயிரம் கட்டினால் ரூ.2 லட்சமும், ரூ.15 ஆயிரம் கட்டினால் ரூ.3 லட்சமும் கடனாக தருவதாக கூறினர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் மகளிர் குழுவினர் என 500-க்கும் மேற்பட்டவர்கள் ரூ.2 கோடி வரை பணம் கட்டினர். ஆனால் கடன் வழங்கவில்லை. நிதி நிறுவனத்தினர் பணத்தை மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடன் தொகையை தராமல் நேற்று முன்தினம் இரவு நிதிநிறுவனத்தை பூட்டி விட்டு தப்பிச்செல்ல ஊழியர்கள் முயன்றனர். இதை அறிந்த காக்களூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கிருந்த 2 பேரை பிடித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். இந்தநிலையில் நேற்று நிதிநிறுவனத்தினர் மோசடி செய்ததை அறிந்த மகளிர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் திருவள்ளூரில் உள்ள தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களது பணத்தை பெற்றுத்தருமாறும், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் திருவள்ளூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com