

சென்னை,
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி ரூ.67.90 கோடியை கோர்ட்டில் அரசு செலுத்தியுள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் அரசுடமையாக்கும் நடவடிக்கைக்கு, அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை தியாகராயநகரில் உள்ள தனது இல்லத்தில் ஜெ.தீபா நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அதிகாரம் இருப்பதற்காக அரசு எந்த சொத்தையும் எடுத்துக்கொள்ள முடியுமா? வேதா இல்லம் எங்களது பூர்வீக சொத்து. வேதா இல்லத்தின் ஒவ்வொரு செங்கலிலும் ஜெயலலிதாவின் ஆன்மாவும், உணர்வுகளும் நிறைந்திருக்கின்றன. தனது 39-வது வயதில் தான் ஜெயலலிதா அரசியலுக்கு வந்தார்.
அதற்கு முன்புவரை குடும்ப உறவினர்களுடன் தான் அவரது வாழ்க்கை அமைந்திருக்கிறது. வெறும் உடமைகளுக்காகவோ, விலை மதிப்புள்ள பொருள் என்பதற்காகவோ நாங்கள் போராடவில்லை. வேதா இல்லம் எங்களது பூர்வீக சொத்து. எனவே எங்கள் உரிமையை கேட்கிறோம்.
வேதா இல்லத்தை நியாயமான முறையில் எங்களிடம் கேட்டிருந்தால் கூட நாங்கள் அரசு எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு அளித்து இருப்போம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. 4 அணியாக உடைந்தது. அப்போது எனது ஆதரவை தேடி ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அப்போது வேதா இல்லம் குறித்து கவலைப்பட வேண்டாம். அதனை நல்ல முறையில் நாங்கள் மீட்டுத் தந்து விடுவோம், என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
அப்போது இப்படி பேசிவிட்டு, இப்போது வேதா இல்லத்தை அரசுடமையாக்கும் நடவடிக்கையை எடுத்து இருக்கிறார்கள். இதில் அரசியல் கண்ணோட்டம் அதிகமாக இருக்கிறது.
வேதா இல்லத்தை மீட்டெடுக்க அனைத்து வகையிலும் முயற்சி எடுக்கப்பட்டது. பணத்துக்காகவோ, பொருளுக்காகவோ நாங்கள் போராடவில்லை. பூர்வீக சொத்தை பாதுகாக்க வேண்டும், உரிமை மற்றும் ஜெயலலிதாவின் உடமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பது மட்டுமே எங்களது நோக்கம்.
வேதா இல்லம் என்பது ஜெயலலிதா நடித்து கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய முதல் சொத்து. எனவேதான் இந்த இல்லத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்று போராடிக்கொண்டு இருக்கிறோம். இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக நாங்கள் எதிர் கொள்வோம்.
வேதா இல்லம் அரசுடமையாக்கும் விவகாரத்தில் எதன் அடிப்படையில் அரசு இழப்பீட்டை மதிப்பு செய்தது? என்று கூட எங்களுக்கு தெரியவில்லை.
இந்த இல்லத்தை அரசு கையகப்படுத்துவதில் எங்களுக்கு துளியளவும் விருப்பமில்லை. நாங்கள்தான் சட்டப்படியான வாரிசு என்று ஐகோர்ட்டு சொல்லிவிட்டது. போயஸ் இல்ல வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், வாரிசுகளை கேட்காமல் எப்படி அரசு மதிப்பீடு செய்ய முடியும்? இந்த விவகாரத்தில் நியாயம் தேடி நாங்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வோம்.
எனவே எங்களது பூர்வீக சொத்தை எங்களுக்கு விட்டு தரவேண்டும். அதுதான் நியாயமான நடைமுறையாக இருக்கும். வாக்கு வங்கிக்காக வேதா இல்லத்தை பயன்படுத்த முடிவு செய்திருக்கிறார்கள். இதில் துளி அளவும் நியாயமில்லை.
என்னைப் பொறுத்தவரையில் வேதா இல்லத்தை அரசு முறையாக கையகப்படுத்த வில்லை என்றுதான் சொல்வேன். இல்லத்தில் இருந்த பொருட்கள் பட்டியலிடப்பட வேண்டும். வேதா இல்ல விவகாரத்தில் தமிழக அரசின் அத்து மீறல் செயல் வருத்தம் அளிக்கிறது. வேதா இல்லத்துக்காக எந்த சட்ட போராட்டத்தையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.