டெல்லி வன்முறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் தொல். திருமாவளவன் பங்கேற்பு

டெல்லி வன்முறையை கண்டித்து புதுவையில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் பங்கேற்றார்.
Published on

புதுச்சேரி,

டெல்லி வன்முறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு புதுவை மாநில முதன்மை செயலாளர் தேவபொழிலன் தலைமை தாங்கினார். ரவிக்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசிய தாவது:-

ஜனநாயக அரசா?

டெல்லியில் மதவெறியர் களால் நடத்தப்பட்ட வன்முறை மூலம் இந்திய நாட்டுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. அமைதியான முறையில் நடந்த முஸ்லிம்களின் போராட்டத்தினால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதை பொறுக்க முடியாததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க ஆட்சியாளர்களோடு கலந்துபேசி வன்முறையை அரங்கேற்றி உள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு பேரணி என்ற பெயரில் பாரதீய ஜனதா கட்சியின் முன்னணி தலைவர்கள் வன்முறையை தூண்டி உள்ளனர். அவர்கள் பேசியதுபோல் நாம் பேசியிருந்தால் காவல்துறை சும்மாயிருக்குமா? இது ஜனநாயக நாடா? இப்போது நடக்கும் அரசு ஜனநாயக அரசா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வழக்குப்போடாதது ஏன்?

ஆனால் சாதி, மதவெறி பிடித்த கும்பல் அமெரிக்க அதிபர் வந்த நேரத்தில் நாங்கள் இதை செய்வோமா? என்கிறது. இந்த வன்முறையில் 40 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இப்படி காட்டுத்தனமான வன்முறை நடத்தினால் நாடு என்னவாகும்? நாட்டில் மாற்று கருத்து சொல்லக் கூடாதா?

டெல்லி வன்முறையை கட்டுப்படுத்தும் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டா? இல்லையா? போகிற போக்கினை பார்த்தால் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் மற்றும் காங்கிரஸ் மீது பழியை போட்டுவிடுவார்கள்போல் உள்ளது. இது உள்துறை மந்திரிக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. வன்முறையை தூண்டியவர்கள் மீது ஏன் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை?

ராஜினாமா

இதுகுறித்து கேள்வி எழுப்பினால் நீதிபதியை மாற்றுகிறார்கள். மோடி, அமித்ஷாவை வைத்து மீண்டும் மனுதர்மத்தை அரசமைப்பு சட்டமாக்க சிலர் முயற்சிக்கிறார்கள். இதனால் கடுமையாக பாதிக்கப்படப்போவது நாம்தான்.

டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற வேண்டும்.

வன்முறையில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கவேண்டும், வன்முறைக்கு காரணமாக பாரதீய ஜனதா தலைவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு தொல்.திருமாவளவன் எம்.பி. பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com