மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Published on

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொன்பரப்பியில் ஒரு பெட்டிக்கடையில் மாற்றுத்திறனாளியான வீரபாண்டியன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தேர்தல் நாளான நேற்று முன்தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் திருமாவளவனுக்கு வாக்களிக்க கோரி அவரது கடைக்கு முன்பாக பிரசாரம் செய்து கொண்டு இருந்தனர். அவர்களை சற்று தள்ளிச்சென்று பிரசாரம் செய்யுமாறு அவர் கூறினார். இதில் வீரபாண்டியனை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் சிலர் விடுதலை சிறுத்தைகள் கட்சி சின்னமான பானை ஒன்றை சாலையில் போட்டு உடைத்தனர்.

இதையடுத்து அ.தி.மு.க. கூட்டணியை சேர்ந்த 4 பேரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்கினர். இதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை தட்டிக்கேட்டனர். இதில் மோதல் ஏற் பட்டது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அருகில் இருந்த காலனி தெருவிற்குள் ஓடி ஒளிந்தனர். அவர்களை விரட்டி சென்றவர்கள் அங்கிருந்த சில ஓட்டு வீடுகளை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவத்தில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று ஜெயங்கொண்டம் திருச்சி- சிதம்பரம் சாலையில் அண்ணாசிலை முன்பு அம்பேத்கர் இயக்கத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி பொன்பரப்பி சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜ்மோகன், சந்திரகலா, ரஞ்சனா, பிரேமா, மணிவண்ணன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேஷ்பாபு, ஸ்ரீதர், தினேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற் படாத நிலையில் இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தொலைபேசி மூலம் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதிலும் உடன்பாடு ஏற்படாத அவர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த சாலையில் 108 ஆம்புலன்ஸ் வந்தது.

இதனை கண்ட அவர்கள் உடனடியாக எழுந்து நின்று வழிவிட்டு மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் திருச்சி- சிதம்பரம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் திருச்சி- சிதம்பரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் வாகனங்களை போலீசார் மாற்று திசையில் திருப்பி விட்டு போக்குவரத்தை சரிசெய்தனர். மறியல் நடைபெற்ற இடத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாமலிருக்கவும், தேவைப்பட்டால் அவர்களை கைது செய்யவும், அப்பகுதியில் போலீஸ் வேன்களுடன் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com