

படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள காட்ரம்பாக்கம் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ,பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நூலகம் உள்ளது. இதே பகுதியில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையக் கட்டிடமும் உள்ளது. இந்த நூலக கட்டிடம் எதிரே ஆபத்தான பள்ளம் ஒன்று உள்ளது இந்த பள்ளத்தில் குப்பை கழிவுகள் பிளாஸ்டிக் பாட்டில்கள், தேங்காய் ஓடுகள் என அனைத்தும் கொட்டப்பட்டுள்ளது.
இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நூலகத்திற்கு வருபவர்களும் அந்த வழியாக செல்லும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
குழந்தைகள் வந்து செல்லும் இந்த பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளமும் அதில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் குப்பை கழிவுகளும் கொட்டப்பட்டு கிடப்பதால் டெங்கு, மலேரியா, ஏற்படுமோ என அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் கூறுகையில்:-
நூலகம் மற்றும் அங்கன்வாடி மையம் உள்ள இந்த பகுதியில் தோண்டப்பட்ட பள்ளம் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நீண்ட நாட்களாக மூடப்படாமல் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
மேலும் குழந்தைகள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏதேனும் ஏற்படாமல் இருக்க உடனடியாக குப்பை கழிவுகளை அகற்றி பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.