உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு: எனது மகளை புழல் பெண்கள் ஜெயிலுக்கு மாற்ற வேண்டும் முதன்மை செயலாளருக்கு நளினியின் தாயார் கோரிக்கை

வேலூர் ஜெயிலில் எனது மகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அவரை புழல் பெண்கள் ஜெயிலுக்கு மாற்ற வேண்டும் என்று நளினியின் தாயார் பத்மா தமிழக முதன்மை செயலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
Published on

வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி பெண்கள் தனி ஜெயிலிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். 29 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் இருவரும் தங்களை விடுதலை செய்யக்கோரி மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நளினிக்கும், அவருடைய அறையில் தங்கியிருந்த ஆயுள் தண்டனை கைதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சத்தம் கேட்டு அங்கு வந்த ஜெயில் காவலர்கள் இருவரையும் அமைதிப்படுத்தினர். இதனை அறிந்த ஜெயிலர் அல்லிராணி இருவரையும் அழைத்து சம்பவம் குறித்து கேட்டுள்ளார். அப்போது ஜெயிலருக்கும், நளினிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் மனவேதனை அடைந்த நளினி அறைக்கு சென்று துண்டால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயில் காவலர்கள் உடனடியாக துண்டை அவரிடம் இருந்து பறித்து தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர். அதைத்தொடர்ந்து அந்த அறையில் தங்கியிருந்த ஆயுள் தண்டனை கைதி வேறு அறைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் ஜெயில் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நளினியின் தாயார் பத்மா நேற்று தமிழக முதன்மை செயலாளர், ஜெயில் டி.ஜி.பி., வேலூர் ஜெயில் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

அந்த மனுவில், எனது மகள் நளினி முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் பெண்கள் ஜெயிலில் உள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை கூடி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு எடுத்தது. ஆனால் இதுவரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை. இந்திய அளவில் அதிக ஆண்டுகள் ஜெயிலில் இருக்கும் பெண் எனது மகள் நளினி தான்.

வேலூர் ஜெயில் அதிகாரிகள் தொடர்ந்து எனது மகளுக்கு தொந்தரவு கொடுத்தும், மன ரீதியாக துன்புறுத்தியும் வருகிறார்கள். ஜெயிலில் எனது மகள் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வருகிறது. வேலூர் ஜெயிலில் இருந்தால் எனது மகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்று அஞ்சுகிறேன். எனவே, எனது மகளை வேலூர் ஜெயிலில் இருந்து சென்னை புழல் பெண்கள் ஜெயிலுக்கு மாற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com