எல்.கே.ஜி. மாணவனை வகுப்பறையில் வைத்து பூட்டியதால் பரபரப்பு பெற்றோர், உறவினர்கள் தர்ணா போராட்டம்

அதியமான்கோட்டை அருகே எல்.கே.ஜி. மாணவனை வகுப்பறையில் வைத்து பூட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள ஜாவிரி கிராமத்தை சேர்ந்தவர் தெய்வம். பெயிண்டர். இவருடைய மகன் தட்சகன்(வயது3). இவன் அதியமான்கோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். இவன் தினமும் பள்ளிக்கு சொந்தமான வாகனத்தில் சென்று வந்தான். நேற்று காலை மாணவன் பள்ளிக்கு வாகனத்தில் சென்றான். பின்னர் மாலை சிறுவன் பள்ளி வாகனத்தில் வீட்டுக்கு வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை தேடி பள்ளிக்கு சென்றனர். அப்போது மாணவன் பூட்டிய வகுப்பறையில் தனியாக அமர்ந்து அழுது கொண்டு இருந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அலுவலர்கள் விரைந்து வந்து வகுப்பறையின் பூட்டை திறந்தனர். பின்னர் பெற்றோர் மாணவன் தட்சகனை வெளியே அழைத்து வந்தனர். அப்போது சிறுவன் உள்ளே இருப்பது தெரியாமல் வகுப்பறையை ஊழியர்கள் பூட்டியது தெரியவந்தது.

இதையடுத்து சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வகுப்பறையை பூட்டிய ஊழியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பள்ளி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதியமான்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பள்ளி வகுப்பறையில் சிறுவனை வைத்து பூட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com