திருவொற்றியூர்,
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு திருவொற்றியூரில் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் பென்ஜமின், பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:-
தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, தரமணியில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தியை திணித்து உள்ளதாக கூறி உள்ளார். ஆனால் அங்கு முதலில் இருந்தே பிரஞ்சு மற்றும் இந்திதான் கற்றுக்கொடுக்கப்பட்டு வந்தது. நாங்கள் எதையுமே மறைமுகமாக செய்யவில்லை. அங்கிருக்கும் 101 மாணவர்களும் கையெழுத்து போட்டு இந்தியை தேர்ந்தெடுத்தார்கள். நாங்கள் இந்தியை திணிக்கவில்லை. மாணவர்கள் விருப்பப்பட்டுதான் அனைத்தும் நடக்கிறது. உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. முழு வலிமையுடன் சந்திக்க தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.