எம்.சூரக்குடி மஞ்சுவிரட்டில் காளைகளை அடக்கிய வீரர்கள்

சிங்கம்புணரி அருகே எம்.சூரக்குடி கிராமத்தில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதையொட்டி மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கினர்.
Published on

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி ஒன்றியத்தில் எம்.சூரக்குடி கிராமத்தில் செகுட்டு அய்யனார், சிறை மீட்ட அய்யனார் மற்றும் படைத் தலைவி அம்மன் ஆகிய கோவில்களின் பொங்கல் விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் முன்னேட்ட நிகழ்ச்சியாக மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கிராமத்தினர் சார்பில் தொழுவத்தில் உள்ள கோவில் காளைகளுக்கு முதல் மரியாதை செய்யப்பட்டு வணங்கி அவிழ்த்து விடப்பட்டன. அதனை தொடர்ந்து தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த மற்ற காளைகளுக்கும் மரியாதை செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து காளைகள் ஒவ்வொன்றாக தொழுவத்திலிருந்து அவிழ்த்து விடப்பட்டன. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு காளைகளை அடக்க முயன்றனர். மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில் பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள் என சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிங்கம்புணரி, பொன்னமராவதி, கொட்டாம்பட்டி, நத்தம், துவரங்குறிச்சி, திருப்பத்தூர், மேலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாடுபிடி வீரர்களும் மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டு காளகளை அடக்கினர்.

சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. விழா ஏற்பாடுகளை எம்.சூரக்குடி கிராமத்தினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com